குடும்பத் தகராறில் நிகழும் துயரங்கள்…

நன்றி குங்குமம் தோழி

சுசனா சேத்… கடந்த இரண்டு வாரங்களாக ஊடகங்களில் தொடர்ந்து ஒலிக்கும் பெயர். பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி சாலையின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் 39 வயது நிறைந்த சுசனா சேத். ஐ.டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO). இவரின் பூர்வீகம் கொல்கத்தா. மிகவும் புத்திசாலியான சுசனா சேத் கொல்கத்தா பல்கலைக்கழகம் ஒன்றில் பிளாஸ்மா இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன், தனது பி.எச்.டி ஆய்வை நிறைவு செய்து, டாக்டரேட் பட்டமும் பெற்றிருக்கிறார். பட்டப் படிப்பை முடித்ததுமே, பாஸ்டனில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய சுசனா, பணி நிமித்தமாக பல்வேறு நாடுகளுக்கும் பயணித்திருக்கிறார்.

சுசனாவிற்கு 2010ல் வெங்கட்ராமன் என்பவருடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவரின் கணவரும் இந்தோனேஷியாவின் ஐ.டி. நிறுவனத்தில் உயர் பதவி வகிப்பவர். இந்தத் தம்பதிக்கு திருமணம் நடந்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகே, அதாவது 2019ல் ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது. குழந்தை பிறந்த சிறிது நாட்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவனும் மனைவியுமாக விவாகரத்துக் கோரி 2020ல் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இவர்களின் விவாகரத்து வழக்கு குழந்தை பிறந்த காலகட்டத்திலேயே தொடங்கி, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்திருக்கிறது. இந்த நிலையில் இந்தோனேஷியாவில் கணவருடன் வசித்து வந்த சுசனா சேத் தனது குழந்தையோடு பெங்களூருவிற்கு தன் வசிப்பிடத்தை மாற்றியிருக்கிறார். பெங்களூருவில் இயங்கி வரும் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றியவர், பிறகு சொந்தமாகவே ஆர்டிபீஷியல் இன்டெலிஜென்ஸி(AI) சார்ந்த நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவுத் துறையில் டாப் 100ல் சுசனா சேத் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தனது நான்கு வயது மகனை அழைத்துக்கொண்டு கோவாவுக்கு சென்ற சுசனா, அங்குள்ள தனியார் ஹோட்டலில் வைத்து, குழந்தையின் மூச்சை அடக்கி கொலை செய்திருக்கிறார். பிறகு குழந்தையின் உடலை சூட்கேசில் திணித்து பெங்களூரு கொண்டு செல்ல திட்டமிட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. சுசனா சேத்தை கைது செய்த கர்நாடக போலீஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற குழந்தையை தாயே மூச்சை அடக்கி கொன்றுவிட்டார் என்பது தாங்கிக்கொள்ள முடியாத அதிர்ச்சிகரமான நிகழ்வுதான். பல்வேறு திறமைகளைக் கொண்ட, அதிகம் படித்த, உயர் பதவியில் இருக்கிற ஒரு பெண் இந்தச் செயலை செய்திருக்கிறார் என்றால், அவரது மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்பது குறித்து அறிய திருச்சி அறம் மனநல மருத்துவமனையின் மனநல மருத்துவர் அசர் நிஷா பேகம் அவர்களிடம் பேசியபோது…

‘‘இரண்டு ஆண்டுக்கு முன்பு திருநெல்வேலியில் நான் பயிற்சி மருத்துவராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது. ஒரு தாய் தனது குழந்தையை கிணற்றில் வீசி எறிந்துவிட்டு, அவரும் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த நிலையில், அருகில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு, அவரின் குழந்தை இறந்த நிலையில், நான் பணியாற்றிய மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

அந்தப் பெண்ணிடம் இணக்கமாகப் பேசியதில் “நீ இருக்காத செத்துரு… உன் குழந்தைய கொன்னுறு” என அசரீரி மாதிரியான ஒரு குரல் அவர் செவிகளில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்திருக்கிறது. இது ஒருவிதமான மனநிலை பாதிப்பின் அறிகுறி (auditory hallucination). இதற்கு செவிசாய்த்தே சில தாய்மார்கள் குழந்தைகளை தங்களுக்கு முன்பே கொலை செய்துவிட்டு, தாங்களும் தற்கொலை செய்து இறப்பை தழுவ முயற்சிக்கிறார்கள். இதுபோன்று அம்மா தன் குழந்தையை கொலை செய்வதை ஃபிலிசைட் (filicide) அல்லது மெட்டர்னல் ஃபிலிசைட் (maternal filicide) என்கிறார்கள்.

இதுமாதிரியான வழக்குகள் இதுவரை இந்தியாவில் நான்கு முதல் ஐந்து பதிவாகியுள்ளது. மற்ற நாடுகளையும் சேர்த்தால் 24 முதல் 25 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்த வழக்குகளில் தொடர்புடைய தாய்மார்கள் 30 வயதை தொட்ட இளம் வயது அம்மாக்களாகவே இருக்கிறார்கள். இவர்களின் பின்னணியை ஆராய்ந்து, சிறையில் சந்தித்து விபரங்களை சேகரித்ததில் 70% தாய்மார்களுக்கு மன அழுத்தம் (depression) மற்றும் மனக்கிளர்ச்சி (Psychosis) என ஏதாவது ஒன்றில் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவருகிறது.

சுசனா சேத் வழக்கைப் பொறுத்தவரை, “நீ கொன்னுட்ட” என்கிற இடத்தில் நின்றுதான் அனைவருமே அவரைப் பேசுகிறார்கள். “பெற்ற குழந்தையை கொல்கிற அளவுக்கு அவருக்கு என்னாச்சு!! ஏன்?” என்கிற கேள்வியை இதுவரை யாரும் எழுப்பவில்லை. குற்றத்தை சுசனா வாயால் ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும். அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதாகத்தான் அடுத்தடுத்த நகர்வுகள் செல்கிறது. ஆனால் அந்தப் பெண் பக்கம் நியாயத்தை கேட்கும் சப்போர்டிங் சிஸ்டம் எதுவும் இங்கில்லை என்பதே இதில் உண்மை.

“அவள் ஒரு கொலைகாரி. கொலை பண்ணிட்டாள்” என்கிற விஷயத்தை மனதில் ஏற்றிக்கொண்டாலே, நம் பார்வையில் அவர் குற்றவாளியாகத்தான் தெரிவார். இந்த மாதிரியான கொலை குற்றங்கள் செய்பவர்களை நாம் குற்றவாளியாக பார்க்காமல், அவரின் வாழ்க்கையில் ஏதோ மனரீதியான பாதிப்பு இருக்கிறது என்கிற கோணத்தில், she may be also a victim என்கிற இடத்தில் வைத்து அணுகினால், கண்டிப்பாக ஏன் இப்படியாக நடந்து கொண்டார் என்பதை மெல்ல மெல்ல வெளியில் சொல்ல முயலுவார்.

தனது விவகாரத்திற்கான காரணத்தை குடும்ப வன்முறை என சுசனா சொல்லியுள்ளார். சுசனா சேத்திற்கு 2010ல் திருமணம் நடைபெற்று, 2019ல் குழந்தை பிறந்து, 2022ல் விவாகரத்து கிடைத்திருக்கிறது. குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகே விவாகரத்து என்றாலும், விவாகரத்துக்கான முன்நிகழ்வுகள் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்கும். திருமணமாகி நீண்ட வருடம் கழித்து பிறந்த குழந்தை பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் கிஃப்டெட் சைல்ட். அப்படியிருக்க இவர் விஷயத்தில் குழந்தை பிறப்பிற்குப் பிறகே திருமண வாழ்க்கை விவகாரத்துக்கு சென்றிருக்கிறது எனில், இதன் காரணம் என்ன என்பதையும் அறிய முயற்சிக்க வேண்டும்.

நமது நாட்டில் விவாகரத்து பெற்றுவிட்டாலே கதை முடிந்தது. குழந்தை வளர்ப்பின் முழு பொறுப்பும் அம்மாவையே சேர்கிறது. அப்பா என்கிற கேரக்டருக்கு குழந்தை வளர்ப்பில் வேலையே இருக்காது. குழந்தைகளின் வளர்ச்சியில் ஒவ்வொரு இடத்திலும் சிங்கிள் மதராக பெண்தான் நிற்கவேண்டிய சூழல் உருவாகும். இதில் அம்மா பக்கத்து குடும்ப உறவுகள் உதவியாக இருந்தால் அந்தப் பெண் தப்பித்தார். உதவி என்பது இங்கே பொருளாதாரம் சார்ந்தது மட்டுமில்லை.

மாறல் சப்போர்ட், பிஸிகல் சப்போர்ட், எமோஷனல் சப்போர்ட் என எல்லாமும் சேர்ந்த சப்போர்ட்டிங் சிஸ்டம் கூடுதலாகத் தேவை. குடும்பத்தினர் ஆதரவு இல்லாமலே புறக்கணிக்கப்பட்ட பெண்ணாக இருந்தால் உயர் பதவி வகித்த நிலையில், குழந்தையையும் கவனித்து, யாரிடத்திலும் வெளிப்படுத்த முடியாமல் உள்ளுக்குள்ளே குமுறிய பெண்ணாகவும் இருந்திருக்கலாம்.
சுசனா சேத் விஷயத்தில், குழந்தை பிறந்ததில் இருந்தே, சிங்கிள் பேரண்டாக, குழந்தையின் முழு பொறுப்பும் அந்தப் பெண்ணின் கைகளில்தான் முழுக்க முழுக்க இருந்திருக்கிறது. உயர் பதவியில் இருந்தவருக்கு பணியிலும் அழுத்தங்கள் கூடுதலாக இருந்திருக்கும். ஹை புரொஃபைல், பெங்களூர் வாசி, நல்ல வருமானம் எனும்போது தன்னுடைய மன அழுத்தத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள மருந்து (medication), போதைப் பழக்கமும் (alcohol) கூடவே இருந்திருக்கலாம்.

மேலும், குழந்தையில் சுசனா சேத் எப்படி வளர்க்கப்பட்டார், அவரின் புறச்சூழல் எப்படி இருந்தது. அவரின் பெற்றோரால் நிராகரிக்கப்பட்டாரா? சுசனாவின் பெற்றோரும் தனித்து வாழ்ந்தார்களா? பிஸிகலாகவும் எமோஷனலாகவும் அவரை யாரும் தவறாகப் பயன்படுத்தினார்களா? என்கிற விஷயங்களையும் அறிய முற்பட வேண்டும். கூடவே தனித்து வாழும் பெண்ணை சமூகம் எப்படியாகப் பார்க்கிறது. நடத்துகிறது என்பதையும் இங்கே பார்க்க வேண்டும். இதில் ஏதோ ஒன்று அவரை இந்த அழுத்தத்திற்குள் தள்ளியிருக்கலாம்.

சுசனா சேத் பணியில் மிகப்பெரிய பொசிஷனில் இருந்திருக்கிறார் என்பதை பூம்மாகப் பார்க்காமல் அதற்கான அழுத்தங்களையும் அந்தப் பெண் தன்னுடன் சுமந்து கொண்டே இருந்திருக்கிறார் என்பதையும் இணைத்தே பார்க்க வேண்டும். தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண், அவருக்கு கீழ் பணியாற்றும் ஆண்களை கட்டுப்படுத்துவதில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதன் மூலமாகவும் அவருக்கு மன அழுத்தமும் மனக் குழப்பமும் இருந்திருக்கலாம். இது அனைத்தும் சேர்ந்து, அந்த ஒரு நொடியில் செய்த விஷயமாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்.

சைக்காட்ரிஸ்ட் ஸ்பெக்ட்ரமில் பல்வேறு டிஸாஸ்டர்கள் உண்டு. சில ஆளுமைக் கோளாறுகளிலும் (personality disorder) பயங்கரமான எமோஷனல் அவுட்பர்ஸ்ட் இருக்கும். பார்க்க ரொம்பவே இயல்பானவர்களாக இருப்பார்கள். திடீரென ரொம்பவே எக்ஸ்டீரிமாக நடந்துகொள்வார்கள். மேலே குறிப்பிட்ட எதாவது ஒன்றில் அவர் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.

அவரின் கொலை முயற்சிகளை பார்க்கும்போது, ரொம்பவே திட்டமிட்டு கொலை செய்ததாகவும் தெரியவில்லை. தன்னுடனே இருக்கும் குழந்தையை கொல்ல வீட்டிலேயே அவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்திருக்கும். இதற்காக கோவா வரை பயணித்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சாகவேண்டும் என முடிவெடுத்த பிறகு, தனக்குப்பின் குழந்தையை யார் கவனிப்பார்கள் என யோசித்திருக்கலாம்? குழந்தை தன் கணவரிடம் வளரக் கூடாது எனவும் நினைத்திருக்கலாம்? தற்கொலைக்கு முயற்சிக்கும்போது அதைச் செய்ய அவருக்கு தைரியம்
இல்லாமலும் போயிருக்கலாம்?

சுசனாவைச் சுற்றி பல்வேறு விஷயங்கள் நிகழ்ந்திருக்கும்போது ஏதோ ஒரு மொமெண்டில் அவர் செய்துவிட்டார் என்பதற்காக அவரை ஒரு மிகப் பெரிய குற்றவாளியாக தள்ளி வைத்துப்பார்ப்பதைவிட, இணக்கமாக அவரை அணுகுவதே இந்த வழக்கில் சரியான அணுகுமுறை.குற்றவாளியை ரிமான்ட் செய்வதற்கு முன்பு அவர் பிஸிகலாகவும், மெண்டலாகவும் பிட்டாக இருக்கிறாரா எனப் பார்ப்பார்கள். குற்றவாளி நடவடிக்கையில் சந்தேகம் இருந்தால் மட்டுமே மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார். ஒருவரின் மன அழுத்தத்தை காவல் துறையாலோ, நீதிமன்றத்தாலே கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியாது. மன அழுத்தத்தைக் கண்டறிய மனநல மருத்துவர் கட்டாயமாகத் தேவை.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post குடும்பத் தகராறில் நிகழும் துயரங்கள்… appeared first on Dinakaran.

Related Stories: