கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

ராமேஸ்வரம்: கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்துக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ராமேஸ்வரம், தனுஷ்கோடி தெற்கு பகுதி மன்னார் வளைகுடா கடலில் நேற்று மதியம், 2:00 மணி முதல் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வழக்கத்தை விட நீர் மட்டம் அதிகரித்தது. மாலை 5 மணிக்கு பிறகு எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுமையாக கடல் நீரால் சூழ்ந்தது.

தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கடல் நீர் தேங்கியதால் மீனவர்கள் குடிசைகள், ஹோட்டல், சங்கு கடைகளை கடல்நீர் சூழ்ந்தது. தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் எழுந்த ராட்சத அலைகளால் தேசிய நெடுஞ்சாலையை கடல் நீர் கடந்து சென்றதில் 2 கி.மீ., சாலையில் சிறிய கற்கள் பரவியுள்ளன. இந்நிலை நீடித்தால் தனுஷ்கோடி சாலை அரிக்கப்பட்டு, சேதமடையும் அபாயம் உள்ளது. இந்நிலையில் தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. 5 அடி வரை கடல் அலை எழுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளூர் மீனவர்கள் மட்டும் தனுஷ்கோடி செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

The post கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: