தொடர் விடுமுறையால் கல்லாறு அரசு பழப்பண்ணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்-செயற்கை நீர்வீழ்ச்சியில் குளித்து உற்சாகம்

மேட்டுப்பாளையம் : கல்லாறு பழப்பண்ணையில் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.கோவை, மேட்டுப்பாளையம் – ஊட்டி செல்லும் சாலையில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவு வரை இயற்கை எழில் நிறைந்த சூழலில் அரசுத்தோட்டக்கலை பழப்பண்ணை அமைந்துள்ளது. ஆங்கிலேயர்களால் 1900-ம் ஆண்டு அரசு தோட்டக்கலை பழப்பண்ணை உருவாக்கப்பட்டது. 122 ஆண்டுகள் பழமையான இந்த பழப்பண்ணை 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சராசரியாக ஆண்டு தோறும் 70 முதல் 80 நாட்கள் வரை மொத்தமாக 130 செமீ முதல் 140 செமீ வரை மழை பெய்து வருகிறது.

மிதவெப்ப சீதோஷ்ண நிலை கொண்ட இந்த பழப்பண்ணையில் பாக்கு, சில்வர் ஓக், காபி நாற்றுகள், மலேசியாவை தாயகமாகக் கொண்ட மங்குஸ்தான், துரியன் பழம், ரம்பூட்டான், இலவங்கம், எலுமிச்சை, நெல்லிக்காய், வெல்வட் ஆப்பிள், பலா, மலேயன் ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு வகையான பழ மரங்களும், கிராம்பு, மிளகு உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவிய பயிர்களும், அலங்காரச்செடி வகைகளான குரோட்டன்ஸ், செம்பருத்தி, இக்ஸோரா, பாக்கு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கோடை வெயில் சதத்தை தாண்டி கொளுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் சித்திரை புத்தாண்டு, சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை, கோடை வெயிலின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் குளுகுளு சீதோஷ்ண நிலை உள்ள பகுதிகள், நீர் நிலைகளில் சுற்றுலா பயணிகள் நாடிச்செல்கின்றனர்.

அந்த வகையில் இந்த பழப்பண்ணையில் நேற்று சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதியது.

குளுகுளுவென்ற சீதோஷ்ண நிலை, இதமான காற்று என ரசித்துக்கொண்டே பழப்பண்ணையின் அழகை கண்டு ரசித்தனர். கோவையின் பல்வேறு பகுதிகள், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் பழப்பண்ணையில் குழந்தைகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள சீசா, சறுக்கல் விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவற்றில் வயது வித்தியாசமின்றி விளையாடி மகிழ்ந்தனர்.

கல்லாறு பழப்பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சியில் சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் என தங்களது குடும்பத்தினருடன் குளித்தும், செல்பி, புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். பின்னர், தாங்கள் கொண்டு வந்திருந்த உணவினை ஒருவருக்கொருவர் பகிர்ந்து உண்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் கல்லாறு அரசுப்பழப்பண்ணைக்கு வந்து கண்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கோவை சூலூரை அடுத்துள்ள கலங்கல் பகுதியைச்சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை ஜெய்கீதா கூறியதாவது: கோடை வெயிலில் காத்துக்கொள்ள தங்களது குடும்பத்தினருடன் வந்துள்ளதாகவும், தீம் பார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது அதற்குரிய கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வகையில் செலவு அதிகரிக்கிறது. இதனால் நடுத்தர குடும்பத்தினரின் பட்ஜெட் பாதிக்கப்படும் நிலை உள்ளது.ஆனால், கல்லாறு பழப்பண்ணையில் நுழைவுக்கட்டணம் குறைவு, இதமான சூழல், குளிர்ந்த மற்றும் சுத்தமான காற்று, இயற்கை எழில் சூழ்ந்த ரம்மியமான இடம் என்பதால் செலவும் குறைவு.

அதே வேளையில் குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்கள் குறைந்த அளவிலேயே உள்ளது. இருந்தாலும் குடும்பத்தினருடன் குறைந்த பொருட்செலவில் நிறைவான மன நிம்மதியை கல்லாறு அரசு பழப்பண்ணை தருகிறது. அதனால் தொடர்ந்து வர உள்ளோம். குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்களை அதிகளவில் தோட்டக்கல்லைத்துறை அமைத்தால் இன்னும் கூடுதல் வசதியாக இருக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல ஏற்ற இடம் கல்லாறு பழப்பண்ணை. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து கோவை குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் கூறுகையில், ‘‘குழந்தைகளுடன் பெரிய அளவில் செலவு செய்யாமல் சந்தோஷமாக ஆடிப்பாடியும், விளையாடி மகிழ ஏற்ற இடம் கல்லாறு பழப்பண்ணை எனவும், எனினும் பழப்பண்ணைக்கு வரும் சாலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அதனை உரிய முறையில் சீரமைத்தால் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக கல்லாறு பழப்பண்ணை மாறும்’’ என தெரிவித்தார்.

The post தொடர் விடுமுறையால் கல்லாறு அரசு பழப்பண்ணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்-செயற்கை நீர்வீழ்ச்சியில் குளித்து உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: