தக்காளி, வெங்காயம் வரிசையில் பூண்டு விலையும் எகிறியது ஒரு கிலோ ரூ..200க்கு விற்பனை: பருவநிலை மாற்றத்தால் உற்பத்தி குறைந்தது

திருச்சி: தமிழகத்தில் தக்காளி, வெங்காயத்தை தொடர்ந்து பூண்டு விலையும் உச்சத்தை தொட்டு நுகர்வோரின் நுகரும் சக்திக்கு சோதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை கிலோ ரூ.140 வரை விலை உயர்ந்து அனைத்து தரப்பினரையும் உலுக்கி வருகிறது. இதனுடன் கூட்டணி அமைத்த சின்ன வெங்காயத்தின் விலையும் கிலோ ஒன்றுக்கு ரூ. 150 என்றளவில் விற்கப்பட்டதில் இல்லத்தரசிகள் விழி பிதுங்கினர். மாத பட்ஜெட்டில் இவற்றால் பெரும் துண்டு விழுவதாய் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் தக்காளி, சின்ன வெங்காயத்துடன் பூண்டும் விலை உச்சத்தில் கூட்டணி சேர்ந்துள்ளது. சாதாரணமாக ஒருகிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கும் பூண்டு விலை தற்போது வெள்ளை பூண்டு, மலைப்பூண்டு என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து வகை பூண்டுகளும் கிலோ ஒன்றுக்கு ரூ.200 என விலை உயர்ந்துள்ளது. தக்காளி, வெங்காயம், பூண்டு கூட்டணியில், விலை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது பூண்டு. உலகில் வெங்காயத்துக்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் பல் வகை பயிர் பூண்டு. உலகில் பூண்டு உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. சீனா ஆண்டுக்கு 1.2 கோடி டன் பூண்டு உற்பத்தி செய்கிறது.

இந்தியாவில் அதில் பாதியளவான 64 லட்சத்து 5 லட்சம் டன் அளவே உற்பத்தியாகிறது. உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருந்தாலும் உற்பத்தி திறன் குறைவாகவே உள்ளது. சித்த மருத்துவம் உட்பட பல்வேறு வகையான மருத்துவ முறைகளிலும் பூண்டு முக்கிய பங்கு பெறுகிறது. காரணம் பூண்டில் பல்வேறு உடல் உபாதைகளை தீர்க்கும் மருத்துவ பொருட்கள் அடங்கியுள்ளது. மேலும் இந்திய சமையலில் மசாலாக்களுடன் பூண்டு சேர்க்காமல் எந்த அசைவ உணவும் இல்லை என்றே கூறலாம். பூண்டு விலை தாறுமாறாக உயர்ந்ததில் அசைவ ஓட்டல்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றன. பூண்டு விலை உயர்வின் காரணம் குறித்து வேளாண் வல்லுனர்களிடம் கேட்டபோது, கடந்த பட்டத்தில் உலகளவில் ஏற்பட்ட ஸ்திரமற்ற பருவநிலை தான் இதற்கு காரணம். உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தேக்கம் சரியாகும்போது மீண்டும் விலை பழைய நிலையை எட்டும் என்றனர்.

The post தக்காளி, வெங்காயம் வரிசையில் பூண்டு விலையும் எகிறியது ஒரு கிலோ ரூ..200க்கு விற்பனை: பருவநிலை மாற்றத்தால் உற்பத்தி குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: