இன்று தியாகிகள் தினம் அமைச்சர்கள், மேயர் மலர்தூவி மரியாதை: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை நினைவுகூர்ந்திடும் வகையில், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் மணிமண்டபம் கலைஞரால் 1998 அக்டோபர் 2ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. மேலும், தியாகிகளை போற்றும் வகையில் கலைஞர் 1999 ஜூலை 17ம் தேதி தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரின் மார்பளவு சிலைகளையும், 2008ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி தியாகி செண்பகராமன் சிலையையும் கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் நிறுவி திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசு சார்பில் ஜூலை 17ம் தேதி தியாகிகள் தினம் என கலைஞரால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, தியாகிகள் தினத்தை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் மணிமண்டபம் முகப்பில் அமைந்துள்ள தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார், தியாகி செண்பகராமன் சிலைகளுக்கு அரசின் சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். நிகழ்ச்சியில் மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர், என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

The post இன்று தியாகிகள் தினம் அமைச்சர்கள், மேயர் மலர்தூவி மரியாதை: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: