×

திருப்பதியில் பரபரப்பு ஆதரவற்றோர் இல்லத்தில் திடீர் வயிற்றுப்போக்கால் 2 பேர் பலி

* 6 பேருக்கு தீவிர சிசிக்சை: கலெக்டர் ஆய்வு

* உணவில் விஷம் கலந்ததா? என விசாரணை

திருமலை : திருப்பதியில் உள்ள தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் உணவில் விஷம் கலந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருச்சானூரில் தனியார் ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கான இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் 70 பேர் உள்ளனர். இதில் 30 பேர் ஆதரவற்ற பிள்ளைகள் ஆவர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அங்கு இல்லத்தில் தங்கியிருந்த பிள்ளைகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அதே பகுதியில் உள்ள மருத்துவர் ஆலோசனையின்படி ஓஆர்எஸ் குடிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் 10 பேரின் நிலை கவலைகிடமாக மாறியது. இதனால் அவர்களை உடனடியாக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே கணபதி(30) உயிரிழந்தார்.

மேலும் மாற்றுத்திறனாளியான சேஷாச்சலம்(16) நேற்று காலை இறந்தார். தொடர்ந்து அனிதா(20), தேஜா(15), ஈஸ்வர்ரெட்டி(25), பிரதீப்(30), ஹிமதேஜா(20) உட்பட 6 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பதி மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார அலுவலர் ஸ்ரீஹரி ரூயா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை நேரில் பார்வையிட்டு டாக்டர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பதியில் உள்ள தனியார் ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மையத்தில் 2 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இருவர் வயிற்றுப்போக்கால் இறந்தனர். அங்கு சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உயிரிழப்பிற்கான காரணம் தெரிந்து கொண்டு அதற்கேற்ப மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னதாக தற்போது உணவில் விஷம் கலந்ததா அல்லது தண்ணீர் மாசுபட்டதா என விசாரித்து வருகிறோம். இதற்காக உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் , டாக்டர்கள் குழுவினர் அந்த இல்லத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உணவு, தண்ணீர் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்யப்படும்.

மேலும் மாவட்டத்தில் டைரியா காய்ச்சல் உள்ளதா என்பது குறித்தும் அறிய ஆங்காங்கே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் தண்ணீர் டேங்கர்கள் சுத்தம் செய்யவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் அந்தந்த பஞ்சாயத்துகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கலெக்டர் உத்தரவின்படி 26ம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில் கலெக்டர் வெங்கடேஷ்வர் மருத்துவமனையில் வயிற்றுப்போக்கால் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் கலந்துரையாடி சிறந்த சிகிச்சை மற்றும் வசதிகளை வழங்க பரிந்துரைத்தார். அதேபோல் தனியார் ஆதரவற்ற இல்லத்தில் உள்ள சமையல் கூடத்தை கலெக்டர் வெங்கடேஸ்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பதியில் உள்ள தனியார் ஆதரவற்ற மையத்தில் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post திருப்பதியில் பரபரப்பு ஆதரவற்றோர் இல்லத்தில் திடீர் வயிற்றுப்போக்கால் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,
× RELATED கொரோனா காலக்கட்டத்தில்...