×

நாளை கெஜ்ரிவால் ராஜினாமா?.. ஆளுநருக்கு பறந்த மெசேஜ்: டெல்லியில் அடுத்த முதல்வர் யார்?

டெல்லி: டெல்லி துணைநிலை ஆளுநரை நாளை மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சந்திக்கிறார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை சிபிஐயும் கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் கடந்த ஜூலை மாதமே ஜாமீன் கிடைத்த நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் கடந்த 13ம் தேதி கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

உச்ச நீதிமன்றம் தனது ஜாமீன் உத்தரவில், ‘முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது; ஆவணங்களில் கையெழுத்து போடக்கூடாது’ என்பது உள்பட பல நிபந்தனைகள் விதித்தது. இதனால், பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கெஜ்ரிவால் தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. அதனை தொடர்ந்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அடுத்த 2 நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார். நேர்மையானவன் என மக்கள் தனக்கு சான்றளித்தால் மட்டுமே மீண்டும் பதவி ஏற்பதாகவும் கூறி உள்ளார்.

இதனிடையே டெல்லி ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார். ஆளுநரை சந்திக்க கெஜ்ரிவால் நேரம் கேட்டிருந்த நிலையில் நாளை மாலை 4.30 மணிக்கு சந்திப்பு நடக்கிறது. ஆளுநரை நாளை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியின் அடுத்த முதல்வர் பதவியில் அமர கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா அல்லது அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய் ஆகியோரில் ஒருவர் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு உள்ளது. இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நாளை கெஜ்ரிவால் ராஜினாமா?.. ஆளுநருக்கு பறந்த மெசேஜ்: டெல்லியில் அடுத்த முதல்வர் யார்? appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,DELHI ,Chief Minister ,Arvind Kejriwal ,Deputy Governor of ,Enforcement Department ,Dikhar ,PRIME ,MINISTER ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் முதல்வராகும் வரையில்...