×
Saravana Stores

துணை ஜனாதிபதி தன்கர் ராகுலை விமர்சிக்கவில்லை மோடியை விமர்சித்துள்ளார்: காங்கிரஸ் விளக்கம்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடர்ந்து வெளிப்படையாக விமர்சித்து வரும் நிலையில், ‘துணை ஜனாதிபதி என்பவர் ஆளும், எதிர்க்கட்சி என இருதரப்புக்கும் பொதுவானவர்’ என காங்கிரஸ் பதிலளித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் தனது அமெரிக்க பயணத்தில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒன்றிய பாஜ அரசின் செயல்பாட்டை விமர்சித்து பேசினார்.

இதுதொடர்பாக துணை ஜனாதிபதி தன்கர், ‘அரசியலமைப்பு பதவியை வகிக்கும் ஒரு தலைவர் கூறிய கருத்துக்கள், அரசியலமைப்புக்கு எதிரான மனநிலையை அவர் கொண்டிருப்பதை காட்டுகிறது’ என்று தொடர்ந்து விமர்சிக்கிறார். இது குறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட்டிடம் செய்தியாளர்கள் நேற்று கேட்ட போது, ‘‘நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன். வெளிநாட்டில் நாட்டை அவமதித்ததாக பிரதமர் மோடியைத்தான் ஜெகதீப் தன்கர் கூறியிருப்பார் என நினைக்கிறேன்.

ஏனெனில் சீனா சென்ற போது மோடி, ‘இந்தியாவில் 2014க்கு முன் பிறந்தவர்கள் தங்கள் தலைவிதியை நினைத்து புலம்புவார்கள்’ என்று கூறியிருக்கிறார். தென் கொரியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் மோடி இதே போன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார். எனவே அவரைத்தான் தன்கர் குறிப்பிட்டிருப்பார். கடைசியாக நாங்கள் சரிபார்த்த வகையில், துணை ஜனாதிபதி ஆளும், எதிர் ஆகிய இருகட்சிக்கும் பொதுவானவர். எந்த கட்சியையும் சாராதவர் அவர். ஆனால் நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு துணை ஜனாதிபதி பேச்சை கேட்டால் என்ன நினைப்பீர்கள்? இதை நான் சொன்னால் கண்ணியமாக இருக்காது. அவர் கவலைப்படுவார்’’ என கூறினார்.

The post துணை ஜனாதிபதி தன்கர் ராகுலை விமர்சிக்கவில்லை மோடியை விமர்சித்துள்ளார்: காங்கிரஸ் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Vice President Thankar ,Rahul ,Modi ,Congress ,New Delhi ,Vice President ,Jagdeep Dhankar ,President ,Rahul Gandhi ,Lok Sabha ,Deputy President ,Thankar ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்புக்காக குரல்...