திப்பம்பட்டியில் இருந்து ஆச்சிப்பட்டி வரை கிழக்கு புறவழிச் சாலையில் புதிய தார் ரோடு அமைக்க அளவீடு-அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி :பொள்ளாச்சி திப்பம்பட்டியில் இருந்து ஆச்சிப்பட்டி வரையிலான கிழக்கு புறவழிச்சாலையில், புதிய தார் ரோடு அமைக்க அளவீடு பணி தீவிரமாக நடக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி நகரில் இருந்து பிரிந்து செல்லும் நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட முக்கிய ரோடுகளில் பகல் மற்றும் இரவு நேரத்தில் தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது. இந்த ரோடு வழியாக நகர் பகுதிக்கு அதிகளவு வாகனங்கள் சென்று வருவதால், அடிக்கடி விபத்து மட்டுமின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதையடுத்து, நகர் வழியாக கோவை, பல்லடம், தாராபுரம், மற்றும் உடுமலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் விரைந்து செல்ல வசதியாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, கிழக்கு வட்ட புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த புறவழிச்சாலையானது, உடுமலை ரோடு திப்பம்பட்டியில இருந்து துவங்கி அனுப்பர்பாளையம், ஆலாம்பாளையம், தொப்பம்பட்டி, குள்ளக்காபாளையம் வழியாக கோவை ரோடு ஆச்சிப்பட்டி வரை என சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு 7 மீட்டர் அகலத்தில் புதிய ரோடு அமைக்கப்பட்டது.

இந்த வழித்தடத்தில் பகல் மற்றும் இரவு நேரம் என தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது. தற்போது, பெரும்பாலான வாகனங்கள் கிழக்கு புறவழிச்சாலை வழியாக செல்கிறது. இந்நிலையில், திப்பம்பட்டியில் இருந்து ஆச்சிப்பட்டி வரை கிழக்கு புறவழிச்சாலையில், புதிய தார் ரோடு அமைத்து சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ளதால், சில இடங்களில் பழுது, விரிசல், சேதம் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, கிழக்கு புறவழிச்சாலையில் புதிதாக தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் அளவீடு பணி துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரோடு போடப்பட்ட பகுதியை மட்டும் அளவீடு செய்து கணக்கெடுக்கெடுக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘பொள்ளாச்சி அருகே உடுமலை ரோடு திப்பம்பட்டியில் இருந்து துவங்கி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோட்டை கடந்து கோவை ரோட்டை சென்றடையும் ஆச்சிப்பட்டி வரை கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு 5 ஆண்டு கடந்துள்ளது. இந்த வழித்தடத்தில் தற்போது அனைத்து ரக வாகனங்களும் சென்று வருகிறது.
தற்போது, நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் புதிய ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கிழக்கு பிறவழிச்சாலையில் மீண்டும் புதிதாக தார் ரோடு அமைப்பதற்காக அளவீடு நடக்கிறது. இந்த பணி இன்னும் சில நாட்கள் நடக்கும். அதன்பிறகு, சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கும் புதிய ரோடு அமைக்க எவ்வுளவு தொகை தேவை என, அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். நிதி ஒதுக்கியபிறகு மீண்டும் புதிய ரோடு போடும் பணி நடைபெறும்’ என்றனர்.

The post திப்பம்பட்டியில் இருந்து ஆச்சிப்பட்டி வரை கிழக்கு புறவழிச் சாலையில் புதிய தார் ரோடு அமைக்க அளவீடு-அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: