திண்டிவனம் அருகே ஆசிட் டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 30 டன் சல்ஃப்யூரிக் ஆசிட் சாலையில் வழிந்தோடியதால் பரபரப்பு

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் பகுதியில் ஆசிட் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியும் அரசுப் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் பகுதியில் ஆசிட் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியின் பின்புறம் அரசு பேருந்து மோதிய விபத்தில் 30 டன் ஆசிட் சாலையில் வழிந்தோடியது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து 30 டன் சல்ஃப்யூரிக் ஆசிட் ஏற்றி கொண்டு டேங்கர் லாரி புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை மன்னார்குடி பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவர் ஓட்டி சென்றார்.

திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்த போது லாரிக்கு பின்னால் வந்த அரசு விரைவு பேருந்து பைக் மீது மோதி டேங்கர் லாரி பின்புறம் அதிவேகமாக மோதியதில் லாரியின் பின்புறம் சேதமடைந்தது. இதனால் லாரியில் ஏற்றி சென்ற 30 டன் சல்ஃப்யூரிக் ஆசிட் சாலை மற்றும் ஓடையில் வழிந்தோடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவ்வழியாக சென்ற வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.

லாரியின் டேங்கரில் இருந்து சல்ஃப்யூரிக் ஆசிட் வெளியேறுவதால் அந்த இடத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நடந்து செல்லும் பொதுமக்களை பாதுகாப்புடன் செல்லவும் அறிவுறுத்தினர். மேலும், லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தி சாலையில் வழிந்தோடும் ஆசிட்டை தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீச்சியடித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post திண்டிவனம் அருகே ஆசிட் டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 30 டன் சல்ஃப்யூரிக் ஆசிட் சாலையில் வழிந்தோடியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: