திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி திடீரென தீக்குளிக்க முயற்சி

*மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயி திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப்சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி, ஆர்டிஓ மந்தாகினி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், அரசு நலத்திட்ட உதவிகள், சுய தொழில் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி 458 பேர் மனுக்களை அளித்தனர். அதற்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த மாதம் 19ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரை அனைத்து தாலுகாக்களிலும் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடந்தது.

எனவே, மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. கடந்த 3 வாரங்களுக்கு பிறகு மீண்டும் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்ததால், வழக்கத்தைவிட பொதுமக்களின் வருகை அதிகரித்திருந்தது. இந்நிலையில், உதவி உபகரங்கள் கேட்டு ஏற்கனவே குறைதீர்வு கூட்டத்தில் மனுக்கள் அளித்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உதவி உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன.

இதில் மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்கள் மீது, தாமதம் இல்லாமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், உதவி உபகரணங்கள், செயற்கை உறுப்புகள் போன்வற்றை உடனுக்குடன் வழங்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.இந்நிலையில், கலசபாக்கம் தாலுகா, பாடகம் அடுத்த காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னக்குழந்தை மகன் பலராமன்(40) என்பவர் தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்துச் சென்று, தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், பலராமனுக்கு சொந்தமான விவசாய நிலத்தை, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் அபகரிக்க முயற்சிப்பதாகவும், அதனை தட்டிக்கேட்டதால் தங்களை தாக்க முயன்றதாகவும் தெரிவித்தனர்.அதைத்தொடர்ந்து, தீக்குளிக்க முயன்றவர்களை திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, பின்னர் சொந்த ஜாமீனில் விடுவித்தனர். மக்கள் குறைதீர்வு கூட்டத்தை முன்னிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தீக்குளிக்கும் முயற்சிகளை தடுக்க, ெபாதுமக்கள் கொண்டுசென்ற பை உள்ளிட்ட பொருட்களை சோதித்த பிறகே அனுமதித்தனர்.

தானியங்கி முறையில் மஞ்சப்பை விற்பனை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், மீண்டும் மஞ்சப்பை இயக்க விழிப்புணர்வுக்காக, மலிவு விலையில் மஞ்சப்பை விற்பனைக்கான தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
அதனை, கலெக்டர் முருகேஷ் நேற்று ெதாடங்கி வைத்தார்.விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட மஞ்சப்பை, தானியங்கி இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அதில், ₹10 செலுத்தி மஞ்சப்பை பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, பரிசோதனை முயற்சியாக கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த தானியங்கி இயந்திரத்தை, இனிவரும் காலங்களில் பஸ் நிலையம், கோயில், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொருத்த திட்டமிட்டுள்ளனர்.அதன்மூலம், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு வெகுவாக குறையும், மஞ்சப்பை பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் 5 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலி, 8 பேருக்கு காற்று மெத்தைகள், 5 பேருக்கு நவீன காதொலி கருவிகள், 5 நபர்களுக்கு ஸ்பிலிண்ட், 5 பேருக்கு காலிப்பர் மற்றும் 13 பேருக்கு இயற்கை மரண உதவித்தொகை உள்பட மொத்தம் 41 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹4.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

The post திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி திடீரென தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: