மழை காரணமாக வேதாரண்யத்தில் 1 லட்சம் டன் உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் மழை காரணமாக இந்தாண்டு 1 லட்சம் டன் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் சுமார் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது. ஜனவரி மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை உற்பத்தி நடைபெறும். ஆண்டுதோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரி மூலம் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படும். கடந்த 1 மாதமாக விட்டு விட்டு மழை பொழிந்ததால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. எனவே உப்பு உற்பத்தி கடந்த மாதமே நிறுத்தப்பட்ட விட்டது. இதனால் இந்தாண்டு 5 லட்சம் டன் வரை மட்டுமே உப்பு உற்பத்தி நடந்தது.

விற்பனை செய்தது போக, சேமித்து வைத்துள்ள உப்பை பனை மட்டை, பிளாஸ்டிக் தார்ப்பாய் கொண்டு தொழிலாளர்கள் மூடி வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வேதாரண்யம் பகுதியில் மழை இல்லை. இதனால் உப்பை வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். உப்பை சாக்கு மூட்டைகளில் அடைத்து, லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கின்றனர்.இதுபற்றி உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகையில், வழக்கமாக ஒரு டன் உப்பு ரூ.2500க்கு விற்கப்படும். ஆனால் இந்தாண்டு ரூ.1,200 முதல் ரூ.1,800 வரை மட்டுமே விலை போகிறது. தேவை குறைந்ததே இதற்கு காரணம் என்றனர்.

The post மழை காரணமாக வேதாரண்யத்தில் 1 லட்சம் டன் உப்பு உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: