திருவள்ளுவர் பல்கலை. பட்டமளிப்பு விழா ஆளுநர் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பெயர் புறக்கணிப்பு: திமுகவினர் போராட்டம்

வேலூர்: திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் அமைச்சர் துரைமுருகன் பெயர் இடம் பெறாததை கண்டித்து திமுகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழத்தில் 17வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 564 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் வி.கே.சிங், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழா அழைப்பிதழில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெயர் இடம் பெறவில்லை. இதை கண்டித்து, பல்கலைக்கழகம் எதிரே திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் துணை மேயர் சுனில்குமார், திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா, மண்டல குழு தலைவர் புஷ்பலதா, ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் சரவணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர். அப்போது, காட்பாடி தொகுதி எம்எல்ஏவும், மூத்த அமைச்சரும், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் கொண்டு வருவதற்கு காரணமான துரைமுருகன் பெயர் ஏன் இடம் பெறவில்லை என்று கேள்வி எழுப்பியும், இதனை கண்டித்தும் கோஷமிட்டனர். அவர்களை அங்கிருந்த போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

The post திருவள்ளுவர் பல்கலை. பட்டமளிப்பு விழா ஆளுநர் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பெயர் புறக்கணிப்பு: திமுகவினர் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: