சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் வைகை ஆற்றின் வலதுபுறம் பிரியும் பழையனூர் கால்வாய் மற்றும் அதே இடத்தில் இடதுபுறம் பிரியும் கானூர் கால்வாய் முதலியவை மிக முக்கியமான கால்வாய்களாகும். தற்சமயம் வைகை ஆற்றின் படுக்கை மட்டம் மண் அரிமானம் காரணமாக சுமார் 1.20 மீ ஆழம் அளவிற்கு மேல் தாழ்ந்து போய்விட்டதால், வைகை ஆற்றில் செல்லும் நீர் கானூர், பழையனூர் கால்வாய்களில் நீர் ஏறிச்செல்ல இயலாத நிலை உள்ளது. இதனால் மேற்காணும் கண்மாய்களின் பாசன ஆதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் 22.1.2025 அன்று கானூர், பழையனூர் கால்வாய் பாசனம் மூலமாக வேளாண் நிலங்கள் பயன்பெறும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே 40.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதன் பயனாக கானூர், பழையனூர் மற்றும் 17 கண்மாய்களின் மொத்த பாசன பரப்பான 6975.53 ஏக்கர் நிலங்களுக்கு வைகை ஆற்று பாசன நீர் ஆதாரம் உறுதி செய்யப்படுவதுடன். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கானூரில் தடுப்பணை கட்டும் பணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டு, நீர் வளத்துறை அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தடுப்பணை கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைவாக முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுருத்தினார். இந்த ஆய்வின்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆர்.தங்கராஜ், செயற்பொறியாளர் எஸ்.ரமேஷ் உள்பட விவசாய பெருமக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநதிகள் கலந்து கொண்டனர்.
The post திருப்புவனத்தில் 40.27 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் appeared first on Dinakaran.
