புதுடெல்லி: ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அவர்களது பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களின் சொந்த மாநில கேடருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாகவே ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைவது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான பிஎஸ்எஃப் டிஜி, சிறப்பு டிஜியை நீக்கியுள்ளது. மேற்கண்ட இரு அதிகாரிகளையும் அவர்களது கேடருக்கு திருப்பி அனுப்பியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த திடீர் முடிவுக்கு, நேரடியாக எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘பிஎஸ்எஃப் டிஜி நிதின் அகர்வால், அவரது பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் கேரளா கேடர் அதிகாரி என்பதால், அவரது சொந்த கேடர் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். சிறப்பு டிஜியாக இருந்த ஒய்.பி.கரானியாவும் நீக்கப்பட்டு, அவரது ஒடிசா கேடருக்கு திருப்பி அனுப்பப்பட்டார். ஜம்மு செக்டாரில் ஊடுருவல் வழக்குகள் அதிகரித்து வருவதால், பிஎஸ்எஃப் டிஜி நிதின் அகர்வால் பணியில் இருந்து நீக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்ஓசியின் சில பகுதிகளை பிஎஸ்எஃப் பாதுகாக்கிறது’ என்று தெரிவித்தன.
The post தீவிரவாதச் சம்பவங்கள் அதிகரிப்பு; 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் நீக்கம்: சொந்த கேடருக்கு அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.