2024ம் ஆண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் 2,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  திருக்கோயில்களின் கட்டணச் சீட்டு மையங்களில் கூட்டத்தை தவிர்க்கவும், பக்தர்கள் எளிய முறையில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக கட்டணச் சீட்டு பெறும் வகையிலும் இரண்டாம் கட்டமாக, 260 திருக்கோயில்களுக்கு 315 கையடக்க கருவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மண்டல இணை ஆணையர்களிடம் வழங்கினார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 2024 இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திடும் வகையில் செயலாற்றி கொண்டிருக்கிறோம். மன்னர்களாலும், மூதாதையர்களாலும் கட்டப்பட்ட 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான கோயில்களாக 717 கோயில்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றை பாதுகாத்து புனரமைக்க அரசு மானியமாக ரூ.200 கோடியும், உபயதாரர்கள் ரூ.130 கோடியும் வழங்கி இருக்கின்றனர். இதன்மூலம் 100க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் நடக்கின்றன. வரும் ஆண்டில் 80 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படும். இதுவரை ரூ.5,558 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

* கோயம்பேடு பேருந்து நிலையம் ஒரு வருடம் செயல்படும்
அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், கிளாம்பாக்கத்தில் முதற்கட்டமாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விரைவில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் அங்கிருந்து இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லுகின்ற பேருந்துகள் இன்னும் ஒரு வருட காலத்திற்கு இயக்கப்படும்.

கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம், ஆகாய நடை மேம்பாலம் அமைப்பதற்கும், பாதசாரிகளுக்காக நடைமேம்பாலம் அமைப்பதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்திருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தை மக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில், அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து சிஎம்டிஏ முடிவெடுக்கும். ஆகவே தற்போது இதில் தேவையற்ற சர்ச்சையை கிளப்ப வேண்டாம் என தெரிவித்தார்.

The post 2024ம் ஆண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: