மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கடலில் இருந்து படகுகளை இழுக்கும் தகராறில் உரிய நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து காவல்நிலையம் எதிரே மீனவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்புடன் பரபரப்பு நிலவியது.

மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் குப்பத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தங்கள் பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய் பணியில் ஊழல் நடந்துள்ளதாக செங்கல்பட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதுதொடர்பாக மீனவர் தரப்பிற்கும் ஊராட்சி துணை தலைவர் தரப்பிற்கும் அடிக்கடி மோதல் இருந்து வந்தது. இதையடுத்து இரு தரப்பையும் அழைத்து கலெக்டர் அருண்ராஜ் மற்றும் சப்-கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அப்போது, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என கைப்பட இருதரப்பினரும் எழுதி கொடுத்துவிட்டு வந்தனர். இந்தநிலையில், மீனவர் குப்பத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் கடலுக்கு மீன்பிடிக்க சென்று மீண்டும் கரைக்கு திரும்பியபோது 27 படகுகளை மட்டும் டிராக்டர் மூலம் கயிறு கட்டி இழுக்க மூன்றரை ஆண்டுகளுக்கு மாதம் ₹30 ஆயிரம் வீதம் ஒப்பந்த அடிப்படையில் டிராக்டர் ஓட்டுனரை கொக்கிலமேடு மீனவ குப்பத்துக்கு நேற்று அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில், ஊராட்சி துணை தலைவர் தரப்பினர் தங்களது படகுகளை கடலில் இருந்து இழுக்காமல் இழுத்தடிப்பதாக மாமல்லபுரம் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் டிராக்டர் ஓட்டுனரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, கடலில் இருந்து இழுத்தால் அனைத்து படகுகளையும் இழுக்கவேண்டும். இல்லை யென்றால் டிராக்டரை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்துள்ளனர்.

இதனால் நேற்று மாலை கொக்கிலமேடு மீனவர் குப்பத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் 100க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரம் போலீசாரை கண்டித்து காவல்நிலையம் எதிரே கோவளம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மீனவ இளைஞர்கள் சிலர் சாலை மறியலை செல்போனில் வீடியோ எடுத்தனர். இதை பார்த்த ஒரு போலீசார் மீனவ மக்களுடன் வாக்கும் செய்து செல்போனை பிடுங்கியுள்ளார். இதையடுத்து, எஸ்ஐ திருநாவுக்கரசு சம்பவ இடத்துக்கு வந்து, நீங்கள் 27 படகுகளையும் டிராக்டர் மூலம் இழுக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை என கூறியதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பு நிலவியது.

The post மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: