திருக்கோயில் செயலி துவக்கம் கோயில் பிரசாதங்கள் பக்தர்களின் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: கோயில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை பக்தர்கள் எளிதில் அறிந்து பயன்படுத்திட திருக்கோயில் செயலி மற்றும் திருக்கோயில் பிரசாதங்களை பக்தர்களின் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை எளிதில் அறிந்து பயன்படுத்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “திருக்கோயில்” எனும் கைபேசி செயலியையும், 48 முதுநிலை கோயில்களின் பிரசாதங்களை பக்தர்களின் இல்லங்களுக்கு ஒன்றிய அரசின் அஞ்சல் துறையுடன் இணைந்து அனுப்பி வைக்கும் திட்டத்தினையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கோயில் செயலியின் மூலம் திருக்கோயில்களின் தலபுராணம், தலவரலாறு, நடை திறந்திருக்கும் நேரம், பூஜைகள், பிரார்த்தனைகள், அதற்கான கட்டண விவரங்கள், முக்கிய திருவிழாக்கள், அனைத்து கோணங்களிலும் திருக்கோயில்களை கண்டுகளிக்கும் மெய்நிகர் காணொலி, திருவிழாக்களின் நேரலை, திருக்கோயில்களை சென்றடைவதற்கான கூகுள் வழிகாட்டி, பக்தர்களுக்கான சேவைகள் போன்றவற்றை அறிந்து கொள்வதோடு, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் திருக்கோயில்களுக்கு செல்லுகையில் மின்கல ஊர்தி, மற்றும் சாய்தளத்தில் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்வதற்கும் தரப்பட்டுள்ள தொலைபேசி எண் சேவையையும், அன்னதானம், திருப்பணி போன்ற நன்கொடைகளையும் வழங்கலாம்.

செயலியில் முதற்கட்டமாக, பிரசித்தி பெற்ற 50 முதுநிலை திருக்கோயில்கள் இடம் பெற்றுள்ளன. அடுத்த கட்டமாக 88 திருக்கோயில்களை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 48 முதுநிலை திருக்கோயில்களின் பிரசாதங்களை அவர்களின் இல்லங்களுக்கே அஞ்சல் துறையின் மூலம் அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயிலின் பிரசாதம் காஷ்மீரில் இருப்பவருக்கு கிடைக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளோம். நாடு முழுவதும் உள்ளவர்கள் திருக்கோயில் பிரசாதங்களை பெறுவதற்கு கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை மட்டுமே வசூலிக்கப்படும். மேலும்3 மாத காலத்திற்குள் உலகம் முழுவதும், திருக்கோயில் பிரசாதங்களை அனுப்பி வைக்கும் நடைமுறை செயல்படுத்தப்படும். இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் முதன்முறையாக திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

The post திருக்கோயில் செயலி துவக்கம் கோயில் பிரசாதங்கள் பக்தர்களின் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: