எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.கழகச் சட்டத்துறை இணைச் செயலாளரும் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் இ.பரந்தாமன் ஏற்பாட்டில் எழும்பூர் தொகுதி மக்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் ‘’நம்ம Egmore’’ என்ற நவீன, ஒருங்கிணைந்த செயலியைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் அறிமுகப்படுத்தியுள்ள இந்த நவீன, ஒருங்கிணைந்த செயலி வெளிப்படைத்தன்மையோடு கூடிய மின்னணு நிர்வாகத்தில் புதுமையைப் புகுத்தும் சாதனமாகும். எழும்பூர் தொகுதி மக்களுக்கும் அவர்களது சட்டமன்ற உறுப்பினரான வழக்கறிஞர் இ.பரந்தாமன் அவர்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்துவதாக இச்செயலி பங்காற்றும்.

எழும்பூர் தொகுதி மக்கள் ‘’நம்ம Egmore’’ என்ற இந்த நவீன ஒருங்கிணைந்த செயலியைப் பயன்படுத்தித் தமது சட்டமன்ற உறுப்பினரைத் கைபேசி/வாட்ஸ்-அப் அழைப்பு வழியாகத் தொடர்பு கொள்ளலாம்; மேலும், சட்டமன்ற உறுப்பினரின் சமூக வலைத் தளப் பக்கங்களுக்கும் செல்ல‍லாம். சட்டமன்ற உறுப்பினரின் அன்றாட நிகழ்ச்சி தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்; சட்டமன்ற உறுப்பினர் சமூக வலைத் தளங்களில் அன்றாடம் இடும் பதிவுகளையும், செய்திகளையும் அறிந்து கொள்ளலாம். எழும்பூர் தொகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். எழும்பூர் தொகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், ரேஷன் கடைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், அரசு மருத்துவமனைகள், வங்கிகள் உள்ளிட்ட அமைப்புகள்/நிறுவனங்களின் முகவரி, இருப்பிடம் ஆகிய விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்; தொகுதி மக்கள் இச்செயலியைப் பயன்படுத்தித் தமது புகார்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் புகார்களை இந்தச் செயலி தானாகவே மாநகராட்சி, மின் வாரியம், குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் எனத் துறை வாரியாகப் பிரித்து, அப்புகார்களுக்குத் தனித்தனியாக எண்களை வழங்கி, அப்புகார்களை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் அலுவலர்கள் இந்தப் புகார்களைச் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்து, அவற்றைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதோடு, புகார்தார‍ர்களுக்கு புகாரின் நிலைமை குறித்தும் தெரிவிப்பார்கள்.

வழக்கறிஞர் இ.பரந்தாமன் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றவுடனேயே, எழும்பூர் தொகுதி மக்கள் தமது புகார்களைத் தெரிவிப்பதற்காக தனித்ததொரு வாட்ஸ்-அப் செயலியை ஜூன் 2021-இல் உருவாக்கி, எழும்பூர் தொகுதி மக்களிடம் அறிமுகப்படுத்தினார். இதுநாள் வரையிலும் அச்செயலியின் வழியாகப் பெறப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட புகார்கள் தீர்த்து வைக்கப்பட்டிருப்பதோடு, அச்செயலி இன்றளவும் எழும்பூர் தொகுதி மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த நவீன ஒருங்கிணைந்த செயலி உருவாக்கப்பட்டிருப்பதோடு, பொதுமக்களின் குறைகளை, கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு செயலூக்கத்தோடு செயல்பட்டு வருவதன் அடையாளமாகவும் திகழ்கிறது.

மேலும், எழும்பூர் தொகுதி மக்கள் தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் பல்வேறு சமூக நலத் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றுக்கு இந்தச் செயலி வழியாகவே விண்ணப்பிக்கும் வகையிலும் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ‘’நம்ம Egmore’’ என்ற இந்த நவீன, ஒருங்கிணைந்த செயலி மின்னணு நிர்வாகத்தில் ஒரு புதிய, உயர்ந்த தரத்தை உருவாக்குவதோடு, பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான இடைவெளியை நவீன மின்னணு சாதனங்கள், வழிமுறைகளைப் பயன்படுத்திக் குறைத்திட முயன்றுவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடப்பாடையும் எடுத்துக் காட்டுகிறது.

சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், தொகுதி மக்களின் குறைகள், புகார்கள், தேவைகள் ஆகியவற்றின் தன்மைகளைப் புரிந்துகொள்ளவும், அதிக கவனம் கொடுக்க வேண்டிய துறைகளை/பகுதிகளை அடையாளம் காணவும், தொகுதி மக்களுக்கு இன்னும் சிறப்பாகச் சேவை செய்வதற்கான சிறந்த முடிவுகளை எடுக்கவும் இந்தச் செயலியின் வழியாகப் பெறப்படும் தரவுகளைப் பயன்படுத்திக் கொள்வார். எழும்பூர் தொகுதி மக்கள் ‘’நம்ம Egmore’’ இந்த நவீன, ஒருங்கிணைந்த செயலியை தமது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கைபேசிகளில் மிக எளிதாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

The post எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: