இளம்பெண் பலாத்கார புகார்; சென்னை விமான நிலையத்தில் மலையாள நடிகர் கைது

திருவனந்தபுரம்: திருமணம் செய்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்து ₹11 லட்சம் பணம் பறித்ததாக கூறி, ஜிம் பெண் பயிற்சியாளர் அளித்த புகாரில் மலையாள நடிகர் ஷியாஸ் கரீம் சென்னை விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் பகுதியை சேர்ந்தவர் ஷியாஸ் கரீம் (32). சில மலையாளப் படங்களில் நடித்து உள்ளார். இது தவிர ஏராளமான டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார்.

எர்ணாகுளத்தில் உடற்பயிற்சி மையமும் நடத்தி வருகிறார். இந்தநிலையில் காசர்கோடு மாவட்டம் பெருன்னா பகுதியை சேர்ந்த 31 வயதான இளம்பெண்ணுடன் ஷியாஸ் கரீமுக்கு பழக்கம் ஏற்பட்டது. திருமணமாகி விவாகரத்து பெற்ற இளம்பெண் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஜிம்மில் பயிற்சியாளராக உள்ளார். இந்தநிலையில் நடிகர் ஷியாஸ் கரீம் தன்னை திருமணம் செய்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாகவும், ரூ.11 லட்சம் பணத்தை பறித்ததாகவும் கூறி இளம்பெண் காசர்கோடு மாவட்டம் சந்தேரா போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் ஷியாஸ் கரீம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஷியாஸ் கரீம் துபாய்க்கு தப்பிச் சென்றார். அதைத்தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் நடிகர் ஷியாஸ் கரீம் இன்று துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். இந்த தகவல் அறிந்ததும் சுங்கத்துறையினர் அவரைப் பிடித்து சந்தேரா போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவரை கைது செய்வதற்காக சந்தேரா போலீசார் சென்னை விரைந்து உள்ளனர்.

The post இளம்பெண் பலாத்கார புகார்; சென்னை விமான நிலையத்தில் மலையாள நடிகர் கைது appeared first on Dinakaran.

Related Stories: