×
Saravana Stores

ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை மேலும் ₹3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம்

சென்னை: ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை மேலும் ₹3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறுவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அங்கு 19 நிறுவனங்களுடன் ₹7,616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு மட்டுமின்றி, உள்நாட்டு தொழிலதிபர்களுடனும் தொடர்ந்து ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில். ₹9,000 கோடி முதலீடு மற்றும் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜாக்குவார் லேண்ட்வார் கார்கள் உற்பத்தி செய்வதற்கான ஆலை அமைப்பதற்கு கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது, ஓசூரில் ₹3,051 கோடி முதலீட்டில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை மேலும் ₹3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை 1.49 லட்சம் ச.மீ. பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை 5 லட்சம் ச.மீ. பரபரப்பளவில் விரிவாக்கம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு இந்த தொழிற்சாலையானது 174 ஏக்கராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இப்போது விண்ணப்பித்துள்ளது. தற்போது இந்த தொழிற்சாலையில் தினசரி 92,000 மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தினசரி 2 லட்சம் மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில்தான் ‘ஆப்பிள் ஐபோன்’ உற்பத்தி செய்ய டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை மேலும் ₹3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Tata Electronics ,Hosur ,CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வணிகம், தொழில் நிறுவனங்கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்