×

விஐபிக்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அவர்களுடன் வரும் வழக்கறிஞர் எண்ணிக்கையை நிர்ணயிக்க சட்டத்தில் இடமில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வி.ஐ.பி.க்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வழக்கறிஞர்கள் ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக ஃபைல்ஸ் எனக் கூறி, தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கின் விசாரணைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜரான போது, 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைக்குள் ஆஜராகியதால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் என்.மகேந்திரபாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில், விஐபிகள் மற்றும் விவிஐபிகள் நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்குகளில், அவர்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்குமாறு உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர், தமிழக அரசு மற்றும் தமிழக டிஜிபி ஆகியோருக்கு மனு அனுப்பினேன். அந்த மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்குமாறு பதிவாளர், தமிழக அரசு மற்றும் டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு வழக்கின் விசாரணை நடைபெறும்போது குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் வழக்கறிஞர்கள் வர வேண்டும் என்று எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

The post விஐபிக்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அவர்களுடன் வரும் வழக்கறிஞர் எண்ணிக்கையை நிர்ணயிக்க சட்டத்தில் இடமில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,CHENNAI ,Tamil Nadu ,DMK ,Dinakaran ,
× RELATED நுகர்வோர் நீதிமன்றங்களில்...