×

சர்ச்சைக்குரிய கருத்தை சொல்லிவிட்டு அப்படி சொல்லவில்லை என வியாக்கியானம் பேசுவதா?.. நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா கடும் கண்டனம்

சென்னை: தெலுங்கர்கள் அந்தப்புரத்துச் சேவகர்கள் என சர்ச்சை கருத்தை சொல்லிவிட்டு, அப்படி சொல்லவில்லை என வியாக்கியானம் பேசுவதா என்று நடிகை கஸ்தூரிக்கு திமுக எம்பி ஆர். ராசா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நடிகை கஸ்தூரி, ’திறமை அடிப்படையில் பிராமணர் அல்லாதார் பதவிகளுக்கு வந்ததால் லஞ்சம் வாங்குகின்றனர்’ என்று பேசி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூகத்தினர் என ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனைவரையும் மிக மோசமானவர்களாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார். தெலுங்கர்கள் அந்தப்புரத்துச் சேவகர்கள் எனச் சர்ச்சை கருத்தைச் சொல்லிவிட்டு, அப்படி சொல்லவில்லை என வியாக்கியானம் பேசுகிறார். பிற சமுதாயத்துக்கு பெண்களையும் அதிகாரிகளையும் கேவலமாகச் சித்தரிப்பதை அனுமதிக்கவே முடியாது.

இது இன்னொரு ஆரிய ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு. தெலுங்கர்களை மட்டுமல்ல.. பெண்களையே கஸ்தூரி கேவலப்படுத்தியிருக்கிறார். ’அந்தப்புரத்து சேவகர்கள்’ என்று ஒரு பெண்ணே பெண் இனத்தையே கேவலமாகச் சித்தரிப்பவர்களுக்கு மற்ற இனத்தைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது? அரசுத் துறை உயர் பதவிகள் என்றாலும் தனியார் துறை பணிகள் என்றாலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளாக இருந்தாலும் அனைத்து உயர் அதிகாரங்களையும் அனுபவித்துக் கொண்டு, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஒதுக்கி வைக்க முயற்சி நடக்கிறது என்றெல்லாம் கூப்பாடு போடுவது, பட்டியல் சமூக மக்களுக்கான சிறப்புச் சட்டங்களைக் கேலி செய்யும் முயற்சி.

வாய்ப்புகளை உருவாக்கி, புறந்தள்ளப்பட்ட மக்களுக்கு அந்த வாய்ப்புகள் சென்றடையச் செய்யவே நாளும் பாடுபட்டு வருகிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு. வன்முறையிலோ- வெறுப்பு அரசியலிலோ என்றைக்கும் நம்பிக்கையற்ற அரசு இது. வெறுப்பின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடவும் திராவிட மாடல் ஆட்சிக்குக் களங்கம் கற்பிக்கவும் எடுக்கப்படும் முயற்சிகள் ஒருபோதும் இம்மண்ணில் வெற்றி பெறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சர்ச்சைக்குரிய கருத்தை சொல்லிவிட்டு அப்படி சொல்லவில்லை என வியாக்கியானம் பேசுவதா?.. நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : A. Raza ,Kasthuri ,CHENNAI ,DMK ,Raza ,Vyakkiyanam ,
× RELATED அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்