தமிழ்நாட்டில் 4 மாதங்களில் 4,200 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில், இன்னும் 4 மாதங்களில் 4200 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், பணியின்போது மறைந்த ஊழியரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பணியாளர்களின் ஓய்வறை திறப்பு விழா நேற்று அய்யப்பன்தாங்கல் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலைய பணிமனை அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார். பின்னர் அமைச்சர்கள் இருவரும், பணியின்போது இறந்த ஊழியர்களின் குடும்பத்தை சேர்ந்த 27 பேருக்கு கருணை அடிப்டையில் பணி நியமன ஆணைகளை வழங்கினர். பின்னர், அய்யப்பன்தாங்கல் பேருந்துநிலைய வளாகத்தில், ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பணியாளர்களின் ஓய்வறையை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சிவசங்கர் திறந்து வைத்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் இன்னும் 4 மாதங்களில் 4200 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும். மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதும், டபுள்டெக்கர் பேருந்து இயக்க செயல்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம் என கூறியதற்கு, தற்போதைய திராவிட மாடல் ஆட்சியின் 2 ஆண்டுகால சாதனைகளை கருத்தில் கொண்டு, அவர் உண்மையை கூறியுள்ளார் என எடுத்துக்கொள்ளலாம்’’ என்று தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் 4 மாதங்களில் 4,200 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: