தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி யார்?: டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஆலோசனை..!!

டெல்லி: தமிழ்நாட்டின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லி யு.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. தமிழ்நாடு காவல்துறையில் மிக உயரிய பதவியானது சட்டம் – ஒழுங்கு டிஜிபி பதவியாகும். இந்த பதவிக்கான தேர்வு என்பது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு சட்டம் – ஒழுங்கு டிஜிபிக்காக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டிருந்தார். அவருடைய பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக அடுத்த டிஜிபி யார்? என்பதை தேர்வு செய்வதற்காக பணிகள் முடுக்கிவிடப்பட்டிருந்தது.

குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 13 அதிகாரிகள் டிஜிபி அந்தஸ்தில் உள்ளனர். அவர்களின் பெயர்கள் அடுத்த டிஜிபிக்கான பரிந்துரைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 3 பெயர்கள் இறுதி செய்யப்படும். அந்த 3 பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையமானது தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கும். அதன் அடிப்படையில் தமிழக அரசு அந்த 3 பெயர்களில் ஒருவரை டிஜிபியாக தேர்வு செய்து அறிவிப்பை வெளியிடும்.

இந்நிலையில் தான், டெல்லியில் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் அமுதா, தமிழகத்தின் தற்போதைய டி.ஜி.பி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதேபோன்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் ஆலோசனை கூட்டத்தில் இடம்பெற்றுள்ளனர். இன்றைய தினம் பெயர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டால் அடுத்த ஓரிரு தினங்களில் தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் என்ற அறிவிப்பு வெளியாகும்.

The post தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி யார்?: டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: