துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 4 புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை ஆகிய கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டு துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தலைமைச் செயலகத்தில் நேற்று அவர் தனது பணிகளை தொடங்கினார்.

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 35 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். திமுக அரசு பொறுப்பேற்கும்போதே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு பேசப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. இப் பதவியை ஏற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின், தனது துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி தமிழகத்தை சர்வதேச அரங்கில் திரும்பிப் பார்க்க வைத்தார். இதையடுத்து அவருடைய செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைந்த சக அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அவருக்கு துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். கட்சிக் கூட்டங்களிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் பேசிய அமைச்சர்கள் வெளிப்படையாகவே தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் ேதர்தல், இடைத்தேர்தல் ஆகிய அனைத்து தேர்தல் வெற்றிகளுக்கும் உதயநிதி ஸ்டாலின் முக்கிய பங்காற்றி வந்தார். இதனால் அவருக்கு அமைச்சரவையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு துணை முதல்வராக்கப்படுவார் என்று பேச்சு எழுந்தது.

இந்த சூழ்நிலையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், “உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவாரா, அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “மாற்றம் இருக்கும். ஏமாற்றம் இருக்காது” என்று முதல்வர் பதில் அளித்தார். இதனால் அமைச்சரவை மாற்றம் உறுதியாக இருக்கும் என்றும், உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வர் ஆவார் என்றும் கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்து நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் இரவே ஒப்புதல் அளித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். அமைச்சர்களாக இருந்த செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அதற்கு பதிலாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இதனால் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டன.

உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடிக்கு வனத்துறையும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் நலத்துறையும், சுற்றுச்சூழல் அமைச்சரான வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரான கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையும், வனத்துறை அமைச்சரான மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு பால் வளம் மற்றும் காதி துறையும் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 4 அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை நடந்தது. பதவியேற்பு விழாவிற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது ஆளுநருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும், புதிய அமைச்சர்களையும் முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து சரியாக பகல் 3.30 மணிக்கு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆர்.ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆவடி நாசர் ஆகியோரை அமைச்சர்களாக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவிப் பிரமாணத்தை தொடர்ந்து அமைச்சர்களுடன் ஆளுநர் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஆளுநர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவில் சபாநாயகர் அப்பாவு, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்களான செல்வப்பெருந்தகை, வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட தலைவர்கள், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், கனிமொழி உள்ளிட்ட அனைத்து எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைச்செயலர் முருகானந்தம், போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் லண்டன் சென்றுள்ளதாலும், தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சராக உள்ள பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது தாயாருக்கு உடல்நலக்குறைவு காரணமாக மதுரை சென்ற நிலையில் அங்கிருந்து வர விமானம் தாமதமானதால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

இலாகாக்கள் அறிவிப்பு
பதவியேற்பு விழா முடிந்ததை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்று கொண்ட அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஆளுநர் மாளிகை வெளியிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை, ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை, டாக்டர் கோவி.செழியனுக்கு உயர்கல்வித்துறையும், சா.மு.நாசருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது.

இதைத்தொடர்ந்து புதிய அமைச்சர்களாக பதவியேற்ற செந்தில்பாலாஜி, ஆர்.ராஜேந்திரன், கோவி.செழியன், சா.மு.நாசர் ஆகியோர் தலைமைச் செயலகம் சென்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேபோல் துணை முதல்வராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்திற்கு சென்று தனது பணிகளை தொடங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதிக்கு, கூடுதலாக திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு, துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அனைத்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக பதவியேற்ற புதிய அமைச்சர்கள் 4 பேரும் மெரினா கடற்கரை சாலையில் உள்ள அண்ணா நினைவிடம், கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். துணை முதல்வராக பொறுப்பு ஏற்பதற்கு முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்கள் நினைவிடங்களுக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

The post துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: