ரூ.5 முதல் ரூ.120 வரை அதிக கட்டணம் தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

சென்னை: தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்ந்தது. ரூ.5 முதல் ரூ.120 வரை கட்டணம் உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப்பாட்டில் இந்த சுங்கச் சாவடிகள் செயல்படுகின்றன. அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது.

இந்த சுங்கச்சாவடிகளில் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ல் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ல் போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாறாக, ஜூன் மாதத்தில் 42 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் கூறியதாவது: இந்த கட்டணம் உயர்வு 10 சதவீதம் வரை இருக்கும். வாகனத்தின் வகையை பொறுத்து ரூ.5 முதல் ரூ.120 வரை கட்டணம் உயர்வு இருக்கும். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் தனியார் வாகனங்கள் அதிகமாக செல்வதால் சுங்க கட்டண வருவாய் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகள் 2023-24ம் ஆண்டில் ரூ.4,221 கோடியை வசூலித்துள்ளன. இது 2022-23ம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட ரூ.3,817 கோடியை விட 10 சதவிகிதம் அதிகம். அகில இந்திய அளவில் தமிழகத்தின் சுங்க கட்டண வருவாய் 5வது இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்
விக்கிரவாண்டி, கொடை ரோடு, மணவாசி, மேட்டுப்பட்டி, மொரட்டாண்டி (புதுச்சேரி) உள்ளிட்ட 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சுங்கச் சாவடி கட்டணம் உயர்வதால் சரக்குகளை கையாள்கின்ற வாகனங்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. கோவையில் இருந்து மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் ஒரு முறை செல்வதற்கு ரூ.200 முதல் ரூ.300 வரை கூடுதலாக சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வருகிறது. இதனால் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயரும். சென்னைக்கு காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை கொண்டு வரும் லாரிகளின் சரக்கு கட்டணம் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ரூ.5 முதல் ரூ.120 வரை அதிக கட்டணம் தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.

Related Stories: