தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்: தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சேலம்: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடப்பு 2023-2024ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடக்கிறது. பள்ளிகளில் படித்து வருபவர்களுக்கு, அந்தந்த தலைமை ஆசிரியர்கள் மூலமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரம் பெறப்பட்டு வருகிறது. இதேபோல், தனித்தேர்வர்களாக தேர்வெழுதுபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில், ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். நடப்பாண்டு பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், வரும் 27ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். காலை 11 மணிமுதல் மாலை 5 மணி வரை, கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.

அதேசமயம், இந்த காலகட்டத்திற்குள் விண்ணப்பிக்க தவறுபவர்கள், தட்கல் (சிறப்பு அனுமதி) முறையில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ₹1,000 மற்றும் பத்தாம் வகுப்பிற்கு ₹500 சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்-லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.

இதனிடையே, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு துறை, அரசாணையின்படி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தொழிற்கல்வி மாணவர்கள் 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத் தேர்வுகளுக்கும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தொழிற்கல்வி மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத் தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக் கால அட்டவணைகளை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்: தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: