கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம்: தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் தகவல்


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு, 16 வகையான விளையாட்டு தளங்கள், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கில் ஓடுதளம், கால்பந்து மைதானம், ஹாக்கி மைதானம், மூன்று கைப்பந்து மைதானம், 2 கூடைப்பந்து மைதானம், பீச் வாலிபால் மைதானம், குத்துச்சண்டை அரங்கம், ஸ்குவாஷ் விளையாட்டு அரங்கம், உள்விளையாட்டு இறகுப்பந்து அரங்கம், நீச்சல்குளம், கபடி மைதானம், டென்னிஸ் மைதானம், பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவை பயன்பாட்டில் உள்ளது. இந்த அரங்கில் மாநில அளவிலான போட்டிகள், மாவட்ட அளவிலான போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது ரூ.8 கோடி செலவில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.

இதற்காக ஓடுதளம் புனரமைக்கப்பட்டு அதன் நடுவே கால்பந்து மைதானம் இருக்கும் வகையில் புல்தரையும் அமைக்கப்பட்டுள்ளது. ஓடுதளத்தில் சிந்தடிக் ஓடுதளம் மட்டும் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. ஓடுதளத்தை சுற்றி மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள குந்தவை நீச்சல் குளம் சர்வதேச தரத்தில் அமைக்கும் வகையில் ரூ.50 லட்சம் செலவில் புனரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். தினமும் காலை, மாலையில் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள், கூடைப்பந்து, வாலிபால், ஹாக்கி, டென்னிஸ், குத்துச்சண்டை, ஓட்டப்பந்தய வீரர்கள், பளுதூக்கும் வீரர்கள் என ஏராளமானோர் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

இதுதவிர கட்டணம் செலுத்தி உடற்பயிற்சி கூடத்திலும் ஏராளமானோர் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் விளையாட்டு அரங்கை முற்றிலும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றன. விளையாட்டு அரங்கில் நடைபெறும் போட்டிகளை கண்காணிக்கவும், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை தடுக்கவும், விளையாட்டு வீரர்கள், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் எந்தவித அச்சமின்றி செயல்படும் வகையிலும் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் கூறுகையில், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கை முழுவதும் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டு வரும் வகையில் 24 கேமராக்கள் பொருத்தப்படுகிறது. முதல் கட்டமாக 12 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் 12 கேமராக்கள் இன்னும் ஒரு சில நாட்களில் பொருத்தப்பட உள்ளன. மொத்தம் ரூ.9 லட்சம் செலவில் இந்த கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. கண்காணிப்பு கேமரா மூலம் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்க அலுவலக அறை மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் இருந்தும் நேரடியாக பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

The post கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம்: தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: