×
Saravana Stores

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீட்டிற்கு மோடி சென்றதால் சர்ச்சை: எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டின் டெல்லியில் உள்ள இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சை வெடித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனா உத்தவ் பால் தாக்கரே பிரிவைச் சேர்ந்த சஞ்சய் ராவத் கூறுகையில், ‘அரசியலமைப்பு அதிகாரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான இத்தகைய உரையாடல் நீதித்துறையின் நம்பிக்கையை குறைமதிப்புக்கு உள்ளாக்கும். பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வீட்டு கணபதி பூஜையில் கலந்து கொண்டுள்ளார். அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்கள், அரசியல்வாதிகளை இந்தவகையில் சந்திப்பது பல்வேறு சந்தேகத்தை எழுப்பும் என்பதே எங்களின் கவலை. மகாராஷ்டிராவின் தற்போதைய அரசு குறித்த எங்களின் வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்பு விசாரணைக்கு வர இருக்கிறது. பிரதமர் மோடியும் அதில் ஒரு பகுதியாக இருக்கிறார். இப்போது எங்களுக்கு நீதிகிடைக்குமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது. அந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்வது பற்றி தலைமை நீதிபதி பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி) தலைவரும், மக்களவை எம்பியுமான சுப்ரியா சுலே கூறுகையில்,’பிரதமர் மோடி, தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டின் இல்லத்திற்குச் சென்றதைக் கண்டு வியப்படைந்தேன். இதுவரை நாம் கேள்விப்படாதது. எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எனக்கு நீதிமன்றங்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. பிரதமரை அழைப்பது குறித்து தலைமை நீதிபதி இதை முன்பே யோசித்திருக்கலாம்’ என்றார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) எம்பி மனோஜ் ஜா கூறுகையில், ‘தலைமை நீதிபதியின் இல்லத்தில் நடைபெறும் கணபதி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்வது, அசவுகரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் அரசியலமைப்பு நிறுவனங்களின் சுதந்திரம் அனைவருக்கும் தெரியும்படி இருக்க வேண்டும். கணபதி பூஜை மிகவும் தனிப்பட்ட பிரச்சினை. நீங்கள் கேமராவுடன் அங்கு செல்கிறீர்கள். இதன் மூலம் அனுப்பப்படும் செய்தி ஒருவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்வின் புகைப்படங்களை பிரதமர் மோடியும், தலைமை நீதிபதியும் வெளியிட்டது ஏன்’ என்று கேள்வி எழுப்பினார். மூத்த வழக்கறிஞரும், உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவருமான கபில்சிபல் கூறுகையில்,’ உயர் பதவியில் இருப்பவர்கள் தனிப்பட்ட நிகழ்ச்சியை இப்படி விளம்பரப்படுத்தக்கூடாது. இதுபோன்ற ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் தனது ஆர்வத்தை ஒருபோதும் காட்டக்கூடாது. தலைமை நீதிபதி வீட்டிற்கு செல்வது பற்றி மோடி ஆலோசனை செய்து, இது தவறான சமிக்ஞையை அனுப்பக்கூடும் என்று அவரிடம் கூறியிருக்க வேண்டும்’ என்றார்.

* நீதித்துறைக்கு இது ஒரு மோசமான சமிக்ஞை
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்,’உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பிரதமர் மோடியை தனது இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சந்திக்க அனுமதித்தது அதிர்ச்சியை அளிக்கிறது. நீதித்துறைக்கு இது மிகவும் மோசமான சமிக்ஞையை அனுப்புகிறது. அதனால் தான் நிர்வாகத்துறைக்கும், நீதித்துறைக்கும் இரு கைகள் எட்டும் தூரம் இடைவெளி இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். வழக்கறிஞரும் சமூக செயல்பாட்டாளருமான இந்திரா ஜெய் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’நிர்வாகத்துக்கும், நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரங்களைப் பிரிப்பதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சமரசம் செய்துள்ளார். தலைமை நீதிபதியின் சுதந்திரத்தின் மீது இருந்த நம்பிக்கை அனைத்தும் போய்விட்டது. நிர்வாகத்திடம் இருந்து தலைமை நீதிபதியின் சுதந்திரத்தின் சமரசம் குறித்து வெளிப்படையாக காட்டப்பட்ட இந்த விஷயம் குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கண்டிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

* தலைமை நீதிபதியை சந்திக்க கூடாதா? பா.ஜ கேள்வி
டெல்லி பாஜ தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மக்களவை எம்பியும் தேசிய செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா கூறுகையில்,’ இந்தியாவின் தலைமை நீதிபதியை பிரதமர் மோடி சந்திப்பதில் அவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவரது வீட்டில் கணபதி பூஜை செய்வதுதான் பிரச்னையாக உள்ளது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் நடத்திய இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி கலந்து கொள்ளவில்லையா? பிரதமர் இந்திய தலைமை நீதிபதியை சந்தித்தால், நீங்கள் ஆட்சேபனை தெரிவிப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் ராகுல் காந்தி அமெரிக்காவில் இல்ஹான் ஓமரை சந்திக்கும்போது, ​​உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. பிரதமர் மோடி மற்றும் தலைமை நீதிபதியின் மரியாதை நிமித்தமான சந்திப்பு ஜனநாயகத்தின் அழகை பிரதிபலிக்கிறது. அவர்களுக்கு என்ன வேண்டும்? ஜனநாயகத்தின் வெவ்வேறு தூண்கள் சந்திக்க முடியாதா, சங்கமிக்க முடியாதா, அவர்கள் நண்பர்களாக இருக்கக்கூடாதா? அவர்கள் எதிரிகளாக இருக்க வேண்டுமா? அவர்கள் ஒருவருக்கொருவர் பேசக் கூடாதா? அவர்கள் கைகுலுக்கக் கூடாதா? அவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை காட்டக்கூடாதா’ என்றார்.

The post உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீட்டிற்கு மோடி சென்றதால் சர்ச்சை: எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chief Justice ,T.Y. ,Modi ,Chandrachud ,New Delhi ,Vinayagar Chaturthi ceremony ,DY ,TY Chandrachud ,Delhi ,Dinakaran ,
× RELATED அரசு வேலைக்கான பணிநியமன விதிகளை...