புதுடெல்லி: சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நாடு முழுவதும் 25 விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் பணிகள், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஒன்றிய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏஏஐ) பராமரித்து வருகிறது. இப்பணிகளை தனியாருக்கு வழங்கி அரசு-தனியார் ஒத்துழைப்புடன் விமான நிலையங்களை மேம்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டது.
இதன்படி, முதல் கட்டமாக திருவனந்தபுரம், மங்களூரு, அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் கவுகாத்தி விமான நிலையங்கள் கடந்த 2019ம் ஆண்டு அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விமான நிலையங்களின் பராமரிப்பு பணிகளை அதானி குழுமம் கவனித்து வருகிறது. இதே போல, மும்பை விமான நிலைய பராமரிப்பு பணியை ஜிவிகே குழுமம் கடந்த 2021 முதல் கவனித்து வருகிறது. இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக 2025ம் ஆண்டுக்குள் 25 விமான நிலையங்களை தனியார் மயமாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும் முன்பாக அடுத்த வாரம் ஒன்றிய நிதி அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட இருப்பதாகவும் ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களவை தேர்தல் காரணமாக இப்பணியில் தொய்வு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது தனியார்மய பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு 25 விமான நிலையங்களை ஏலம் விடும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 25 விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை, திருச்சி மதுரை விமான நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் முதலில் விஜயவாடா, புவனேஸ்வர், திருச்சி, இந்தூர், ராய்ப்பூர், அமிர்தசரஸ் மற்றும் வாரணாசி ஆகிய 7 பெரிய விமான நிலையங்களும் குஷிநகர் (உபி), கயா (பீகார்), ஹூப்பள்ளி (கர்நாடகா), அவுரங்காபாத் (மகாராஷ்டிரா), ஜபல்பூர் (மத்தியப் பிரதேசம்), திருப்பதி (ஆந்திரா) மற்றும் காங்க்ரா (இமாச்சல பிரதேசம்) ஆகிய 7 சிறிய விமானங்களும் என 13 விமான நிலையங்கள் முதலில் தனியார் மயமாக்கப்பட உள்ளது. எஞ்சிய விமானங்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தனியார் மயமாக்கப்படும். இதற்கான ஏலத்தில் பங்கேற்று அடுத்த ஆண்டுக்குள் 30 முதல் 35 விமான நிலையங்களின் பராமரிப்பு பணிகளை கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post திருச்சி, மதுரையுடன் சேர்த்து சென்னை விமான நிலையத்தையும் தனியார்மயமாக்க ஏற்பாடு: பட்ஜெட்டுக்கு பிறகு பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.