பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் புதிய நிலை அறிக்கை சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு: மருத்துவர்கள் பணிக்கு திரும்ப அறிவுறுத்தல்

புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கடந்த மாதம் கொல்லப்பட்டார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து இதுதொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ” இந்த விவகாரத்தில் மருத்துவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டத்தால் தற்போது வரையில் 23 நோயாளிகள் பரிதாபமாக இறந்துள்ளனர். சம்பவத்தன்று இறந்த பெண் மருத்துவரின் ஜீன்ஸ் பேன்ட் நீக்கப்பட்டிருந்தது. உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது. அவர் அரை நிர்வாணமாக தான் காணப்பட்டார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தான் இறந்துள்ளார் என்பது தெரியவந்தது என்று கூறினார்.

இதையடுத்து தலைமை நீதிபதி உத்தரவில், இந்த வழக்கை வரும் 17ம் தேதி ஒத்திவைக்கிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்கில் புதிய நிலை அறிக்கையை சிபிஐ தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் 2 நாட்களில் பணிக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு எங்களை ஆளாக்காதீர்கள். மேலும் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் எத்தனை அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்கங்கள் உள்ளது என்பதை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் தமைமையில், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஆய்வு செய்ய வேண்டும். அதில் மருத்துவர்களின் பாதுகாப்பு, கழிப்பறை வசதி, தங்குமிடம், பயணங்கள், சி.சி.சிடி கேமராகள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து இரண்டு நாளில் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையாக ஒப்படைக்க வேண்டும். இதில் மருத்துவர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

The post பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் புதிய நிலை அறிக்கை சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு: மருத்துவர்கள் பணிக்கு திரும்ப அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: