நீடாமங்கலம் : கோடை நடவுப் பயிரில் பூச்சி, எலிகளை கட்டுப்படுத்த பறவை தாங்கி பயன்படுத்தலாம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜேஷ் மற்றும் பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,திருவாரூர் மாவட்டத்தில் தற்பொழுது கோடை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே பூச்சிகளி ன் தாக்கங்கள் காணப்படுகிறது. பொதுவாக பூச்சி தாக்கங்கள் நெற்பயிரில் அனைத்து பருவத்திலும் தாக்கி சேதாரத்தை விளைவிக்க கூடியது.
பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலே பயிரை பாதுகாக்கலாம். தற்போதைய இளம் பருவத்தில் அதிக அளவிலான ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக தலைச்சத்து உரங்கள் பரிந்துரையை விட அதிகமாக இடுவதை தவிர்க்க வேண்டும், மேலும் பரிந்துரைக்கப் பட்ட அளவில் இரண்டாகப் பிரித்து ஒரு வார இடைவெளியில் இடலாம். இதனால் பூச்சி மற்றும் நோய்களின் பெருக்கத்தை தடுக்கலாம். நெல் வயலில் ஆங்காங்கே பறவைகள் உட்காருவதற்கு ஏதுவாக தென்னை மட்டையின் அடிப்பகுதியை வெட்டி 3 அடி உயரத்திற்கு தயார் செய்து ஊற்றி விட்டால் பகல் மற்றும் இரவு நேர பறவைகள் நெற்பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் புழுக்களை பிடித்து உண்டுவிடும்.
மேலும் எலிகள் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தலாம். இவ்வாறாக இயற்கையாக பூச்சிகள் மற்றும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதால் நெற்பயின் சேதாரத்தை செலவின்றி குறைக்கலாம்.தாய் அந்து பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாகும் போது ஏக்கருக்கு ஐந்து என்ற அளவில் விளக்குப்பொறி வைத்து அவற்றைக் கவர்ந்தழிக்கலாம். கவர்ச்சி பொறி எக்டருக்கு 10 முதல் 12 வரை பயன்படுத்தி தாய் அந்து பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம் முன்னெச்சரிக்கையாக முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை பயன்படுத்தலாம், டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணிஅட்டைகளை பயிர் நட்ட 37, 44 மற்றும் 51 நாட்களில் மூன்று முறை எக்டருக்கு 5 சிசி என்ற அளவில் காலை வேளையில் கட்ட வேண்டும்.
முட்டை ஒட்டுண்ணிகளை விடுவதற்கு மூன்று நாட்கள் முன்பு மற்றும் விட்ட ஏழு நாட்கள் வரை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தக்கூடாது பாதிக்கப்பட்ட இலைகளை கில்லி எறியலாம். மேலும் இலையை உண்ணும் புழுக்களை கீழே விழ செய்ய நீளமான கயிற்றை இருபுறமும் பிடித்து இழுக்கலாம். இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.மேலும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி, இது குறித்து விவசாயிகள் விழிப்புடன் செயல்பட்டு பூச்சியின் தாக்கம் மற்றும் எலிகள் தாக்குதலிருந்து நெற்பயிரை பாதுகாத்து அதிக மகசூல் ஈட்ட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The post கோடை நடவு பயிரில் எலிகளை கட்டுப்படுத்த பறவை தாங்கி appeared first on Dinakaran.