ஜோ பைடனை மீண்டும் களமிறக்க கட்சிக்குள் கடும் எதிர்ப்பு; இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டி?: மாஜி அதிபர் ட்ரம்புக்கு ெபருகும் ஆதரவை சரிகட்ட திடீர் முடிவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை மீண்டும் களமிறக்க கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், இந்திய வம்சாவளியான துணை அதிபர் கமலா ஹாரிசை அதிபர் தேர்தலில் களமறிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் பிரதான அரசியல் கட்சிகளாக ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் உள்ளன. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் உள்ளார். இந்த ஆண்டு (2024) அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதால் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும்.

இரு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். ஜனநாயகக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், டீன் பிலிப்ஸ், மரியன்னே வில்லியம்சன் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவி வந்தது. ஆனால், ஜோ பைடனுக்கு ஆதரவு அதிகமாக கிடைத்தது. இதையடுத்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் அவரே மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல், குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்டு ட்ரம்ப், நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி இடையே போட்டி நிலவியது. மாகாணங்களில் நடந்த தேர்தலில் பெரிய ஆதரவு இல்லாததால் விவேக் ராமசாமி விலகினார். கடைசி நேரத்தில் நிக்கி ஹோலிக்கு ஆதரவு குறைந்ததால் அவரும் விலகினார். இதனால், தற்போது ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக அக்கட்சியின் சார்பில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி நடந்தது. இந்த விவாத நிகழ்ச்சியில் ஜோ பைடன் தடுமாறினார். அதனால் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களே, ஜோ பைடனை அதிபர் வேட்பாளர் பொறுப்பில் இருந்து மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இருந்தும், தான் அதிபர் தேர்தல் களத்தில் தான் இருக்கிறேன் என்றும், தான் பின்வாங்க போவதில்லை என்றும் 81 வயதான ஜோ பைடன் உறுதியாக கூறினார். ஆனால் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகளில் ஜோ பைடனுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதத்தை விட, துணை பிரதமரான கமலா ஹாரிஸுக்கு (துணை பிரதமர் கருத்து கணிப்பில்) அதிக வாக்குகள் கிடைத்தன. அதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு பதிலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸை களமிறக்க. ஆளும் ஜனநாயக கட்சியில் உள்ளவர்களே சிலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

சர்வதேச செய்தி நிறுவனமான ‘ராய்ட்டர்ஸ்’ போன்ற நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பிலும், அது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்ட அறிக்கையில், ‘ஜோ பைடனுக்கு செல்வாக்கு குறைந்து வருகிறது. அதிபர் தேர்தலில் மீண்டும் அவர் போட்டியிடுவது என்பது கேள்வியாக உள்ளது. முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிராக துணை அதிபர் கமலா ஹாரிசை களமிறக்க வேண்டும் என்ற கருத்துகள் கட்சிக்குள் மேலோங்கி உள்ளது. ஜோ பைடன் அதிபர் பதவிக்கு மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது என்ற அழுத்தம் அவருக்கு அதிகரித்து வருகிறது. ஜோ பைடனின் மூத்த ஆலோசகர்கள் சிலர், அவரை தேர்தலில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். ஜோ பைடனை மீண்டும் களமிறக்கினால் ட்ரம்ப் எளிதாக வென்றுவிடுவார்; அதனால் கமலா ஹாரிசை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஜோ பைடனை மீண்டும் களமிறக்க கட்சிக்குள் கடும் எதிர்ப்பு; இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டி?: மாஜி அதிபர் ட்ரம்புக்கு ெபருகும் ஆதரவை சரிகட்ட திடீர் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: