இலங்கை பெண் ஓமன் நாட்டில் பரிதவிப்பு

சென்னை:திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் சுமார் 3,000 பேர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், இங்கு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தவர் பிரேமா (41). இவருக்கு 10 வயதில் மிதுசிகா என்ற மகளும், 8 வயதில் ஜினோக்சன் என்ற மகனும் உள்ளனர். இதில், பிரேமாவின் தாயாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், ஓமன் நாட்டில் வீட்டு வேலை செய்ய பிரேமா முடிவு செய்தார். இதற்காக, பிரேமா கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் ஓமன் நாடு சென்றடைந்தார். மாதம் ஒரு வீடு என ஐந்து வீட்டின் உரிமையாளர்களுக்கு அவர் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், வேலை நெருக்கடி, செல்போனில் பேச தடை என தொடர்ந்து அவருக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் மறைமுகமாக, ஓமனில் தான் சித்ரவதை செய்யப்படுவதை செல்போனில் ஆடியோவாக பதிவிட்டுள்ளார் பிரேமா. பிறகு அதை தனது தாய் மலர் (62) செல்போனுக்கு அனுப்பி உள்ளார். அது தற்போது வைரலாக பரவுகிறது. பிரேமாவின் 2 குழந்தைகள் கூறும்போது, ‘‘எங்கள் தாயை ஓமன் நாட்டில் இருந்து உடனடியாக மீட்டு இந்தியா அழைத்துவர வேண்டும்’’ என தமிழ்நாடு முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post இலங்கை பெண் ஓமன் நாட்டில் பரிதவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: