தென் இந்தியாவில் அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தென் இந்தியாவில் அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர ஆந்திராவில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்ப அலைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நேற்று வெயில் கொளுத்தியது. இதனால், 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது. அதிகபட்சமாக வேலூரில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று 105 டிகிரி ஃபாரன்ஹீட் அடித்ததால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

தமிழகம் முழுவதும், கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. பல மாவட்டங்களில் வெயில் சதத்தை கடந்தது. அதிலும் குறிப்பாக ஈரோடு, கரூர், வேலூர், சேலம், தர்மபுரி, மதுரை, திருத்தணி, திருப்பத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் வெயிலின் உக்கிர தாண்டவம் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. வருகிற 28ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று வெயிலின் கோர தாண்டவம் என்பது மிக, அதிகமாக இருந்தது.

இதனால், தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் நேற்று 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 106.7 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அதற்கு அடுத்தபடியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 105.26 டிகிரி வெயில் பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 105.08 டிகிரி, கரூர் பரமத்தி 104 டிகிரி, திருத்தணி 103.64 டிகிரி, மதுரை விமான நிலையம் 103.64 டிகிரி, மதுரை நகரம் 102.92 டிகிரி, ஈரோடு 102.92 டிகிரியாக பதிவாகி இருந்தது. திருச்சி 102.74 டிகிரி, தஞ்சாவூர் 102.2 டிகிரி, கடலூர் 101.12 டிகிரி, நாகப்பட்டினம் 100.76 டிகிரி, பரங்கிப்பேட்டை 100.58 டிகிரி என 13 இடங்களில் வெயில் சதத்தை கடந்தது. மேலும் புதுச்சேரியில் 101.84 டிகிரி வெயில் பதிவானது.

இந்நிலையில், தென் இந்தியாவில் அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post தென் இந்தியாவில் அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: