×
Saravana Stores

கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் புதிய பிரதமராகிறார் ஷெபாஸ் ஷெரீப்: பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்

இஸ்லாமாபாத்: கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்க உள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 8ம் தேதி நடந்தது. இதில், ராணுவத்தின் ஆசி பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் (பிஎம்எல்-என்) தலைவர் நவாஸ் ஷெரீப் அதிக இடங்களை கைப்பற்றி 4வது முறையாக நாட்டின் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னாள் பிரதமரும், கிரிக்கெட் நட்சத்திரமுமான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள்தான் அதிக தொகுதிகளை கைப்பற்றினர். ஊழல் மற்றும் ரகசிய காப்புறுதி மீறல் வழக்கில் இம்ரான் சிறையில் அடைக்கப்பட்டதால் அவரது கட்சி தேர்தலில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதுடன், கட்சியின் கிரிக்கெட் மட்டை சின்னமும் முடக்கப்பட்டது. இந்த நிலையில் சுயேச்சையாக போட்டியிட்ட பிடிஐ கட்சி 101 இடங்களில் வெற்றி பெற்றது. நவாஸ் ஷெரீபின் பிஎம்எல்-என் கட்சி 75 இடங்களில் மட்டுமே வென்றது.

முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரியின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 54 தொகுதிகளில் வென்றது. இந்நிலையில் பிஎம்எல்-என் கட்சியுடனோ, பிபிபி கட்சியுடனோ இணைந்து ஆட்சியமைக்க போவதில்லை என்றும் எதிர்க்கட்சியாகவே செயல்படுவோம் என்று இம்ரான்கான் கூறிவிட்டார். இதையடுத்து புதிய கூட்டணி அரசை அமைப்பதற்காக பிஎம்எல்-என் மற்றும் பிபிபி கட்சிகளுக்கு இடையே 2 நாள்களாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்த தேர்தலில் பிடிஐ கட்சி நேரடியாக போட்டியிடாததால் அதிக இடங்களை கைப்பற்றியும் அந்த கட்சிக்கு நியமன இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படாது. ஆனால் பிற கட்சிகளுக்கு அந்த இடங்கள் கிடைக்கும். எனவே, பிடிஐ அல்லாத பிற கட்சிகளுடன் இணைந்து பிஎம்எல்-என் மற்றும் பிபிபி கட்சியால் ஆட்சியமைக்க முடியும். இருந்தாலும், புதிய அரசில் தங்களது தலைவர் பிலாவல் புட்டோ ஜர்தாரிக்குத்தான் பிரதமர் பதவி அளிக்கப்படவேண்டும் என்று பிபிபி கட்சி வலியுறுத்தியது.

ஆனால் நவாஸ் ஷெரீப்தான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று பிஎம்எல்-என் கூறியது. இதனால், புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், புதிய அரசில் பிரதமர் பதவியை கோர போவதில்லை என்றும் அந்த அரசிலும் இணைய போவதில்லை என்றும் அரசுக்கு வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு தருவோம் என்று பிலாவல் புட்டோ ஜர்தாரி நேற்று கூறினார். இதையடுத்து அடுத்த சில மணி நேரத்தில் முன்னாள் பிரதமரும், தனது இளைய சகோதரருமான ஷெபாஸ் ஷெரீஃபை (72) புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நியமனம் செய்துள்ளார். பாகிஸ்தானின் 3 முறை பிரதமரான நவாஸ் ஷெரீப்தான் மீண்டும் அந்த பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறு ஒருவர் நியமனம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

The post கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் புதிய பிரதமராகிறார் ஷெபாஸ் ஷெரீப்: பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம் appeared first on Dinakaran.

Tags : Shebas Sharif ,Islamabad ,Pakistan ,Pakistan Muslim League-Nawaz Party ,PML-N ,
× RELATED ஊழல் வழக்கில் இம்ரான் மனைவிக்கு ஜாமீன்