×

இஸ்ரேலுக்கு குண்டு வீச்சு விமானம் அனுப்பியது அமெரிக்கா; மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிப்பு: எச்சரிக்கையை மீறி மீண்டும் தாக்கினால் ஈரானுக்கு ஆபத்து

பெய்ரூட்: எச்சரிக்கையை மீறி இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதலை நடத்தினால், இஸ்ரேலை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று அறிவித்துள்ள அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு குண்டு வீச்சு விமானங்களை அனுப்பி வைத்துள்ளது. காசாவின் ஹமாஸ் தீவிரவாதிகள், லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தலைதூக்க முடியாத அளவுக்கு லெபனான், காசா பகுதிகளில் இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சிரியாவை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் மற்றும் ஏமனின் ஹவுதி தீவிரவாதிகளுக்கு அமெரிக்க போர் விமானங்கள் தகுந்த பாடம் கற்பித்து உள்ளன. மேற்கண்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. அதனால் கடந்த அக்டோபர் 1ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை வீசியது. இதற்கு பதிலடியாக கடந்த 26-ம் தேதி இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் ஈரானின் 20 ராணுவ தளங்கள் மீது குண்டுகளை வீசின.

அன்றைய தினம் ஈரானின் ஆயுத கிடங்குகள், ஆயுத உற்பத்தி ஆலைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இதுவரை தீவிர தாக்குதல் நடத்தப்படவில்ைல என்று கூறப்படுகிறது. அதேநேரம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் துணிந்தால் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. காசா மற்றும் லெபனானில் தீவிர தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா ஆகிய நாடுகளை பழிவாங்குவோம் என்றும், இதுவரை 50,000 பேர் பலியானதாக ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி தெரிவித்துள்ளார்.

வடக்கு லெபனானின் விவசாய கிராமங்களில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர். அதேநேரம் லெபனானில் இருந்து மத்திய இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால், நேற்று கட்டிடங்கள் சேதமடைந்தன. கிட்டத்தட்ட 7 பேர் காயமடைந்தனர். காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ஹிஸ்புல்லா தீவிரவாத குழுவுக்கு எதிரான தனது தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் காசாவில் செயல்படும் ஐ.நா நிவாரண உதவி மையத்தில் நேற்று குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி முகாம் நடந்தது. அந்த முகாம் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 குழந்தைகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இஸ்ரேல் மறுத்துள்ளது. இஸ்ரேல் கடற்படைப் படைகள் நேற்று வடக்கு லெபனானில் நுழைந்தன. தொடர்ந்து ஹெஸ்புல்லா அமைப்பின் மூத்த கடற்படை தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரை வடக்கு லெபனானில் இருக்கும் பட்ரூனுக்கு ஆயுதமேந்திய குழுவினர் அழைத்து சென்றனர். அந்த கேப்டன் ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடையவரா? அல்லது இஸ்ரேல் உளவு அமைப்பில் பணிபுரிகிறாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஜாபர் காதர் பவுர் என்பவர் கொல்லப்பட்டார். இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஈரான் உச்ச தலைவர் அறிவித்துள்ளதால், ஈரான் – இஸ்ரேல் இடையில் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது. அதனால் இஸ்ரேலை பாதுகாக்கும் வகையில் பி-52 என்ற குண்டுவீச்சு விமானங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி உள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தினால், அந்த ஏவுகணைகளை இடைமறித்து தாக்கவும், பதிலடி கொடுக்கவும் இஸ்ரேலுக்கு ஏராளமான ஆயுதங்களை அமெரிக்கா சப்ளை செய்து வருகிறது. அவ்வாறு இஸ்ரேல் மீது ஈரான் தீவிர தாக்குதலை மீண்டும் நடத்தினால், ‘இஸ்ரேலை எங்களால் கட்டுப்படுத்த முடியாது’ என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்ததாக ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ செய்தி வெளியிட்டுள்ளதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதுவரை 370 இஸ்ரேல் வீரர்கள் பலி
வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்திய போது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்டனர். மற்றொரு வீரர் படுகாயமடைந்ததாகவும், இவர்கள் கிவாட்டி படைப்பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. காசா மற்றும் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரில் இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்த 370 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் கடந்த மாதத்தில் இருந்து வடக்கு காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 900 தீவிரவாதிகளை கொன்றது. மேலும் 700 பாலஸ்தீன மக்களை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர். அவர்களில் 300 பேர் தீவிரவாத அமைப்பினர் உறுப்பினர்களாக உள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவத்தின் ஐடிஎப் தெரிவித்துள்ளது.

The post இஸ்ரேலுக்கு குண்டு வீச்சு விமானம் அனுப்பியது அமெரிக்கா; மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிப்பு: எச்சரிக்கையை மீறி மீண்டும் தாக்கினால் ஈரானுக்கு ஆபத்து appeared first on Dinakaran.

Tags : US ,East ,BEIRUT ,United States ,Israel ,Iran ,Middle East ,Gaza ,Hamas ,Lebanon ,Hezbollah ,Dinakaran ,
× RELATED அமெரிக்க அதிபர் தேர்தலில், டோனல்ட்...