×

ஸ்பெயினில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்பெயின்: ஸ்பெயினில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. வலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இது ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கார்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தேடும் நிலை நிலவுகிறது. அந்த நாட்டின் கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 213 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுனாமி பேரலைகள் ஏற்படுத்தும் பாதிப்பை காட்டிலும் இது அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை அன்று ஸ்பெயினில் கனமழை பொழிந்தது. இதில் கிழக்கு வலேன்சியா பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் சாய்ந்த மின்கம்பங்கள், வேரோடு சாய்ந்த மரங்கள், சேரும் சகதியுமான வீதிகள் மற்றும் வீடுகள், ஒன்றான மீது ஒன்றாக நின்ற கார்கள் என்று திரும்பும் பக்கமெல்லாம் சேதம். இதற்கு மத்தியில் தான் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலமாகவும் ஸ்பெயின் ராணுவம் மீட்டது. சுமார் 70 பேரை இப்படி மீட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மீட்கப்பட்டவர்கள் மொட்டை மாடி மற்றும் கார்களில் சிக்கி இருந்தவர்கள். தரைவழியாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை புதன்கிழமை அன்று அணுக முடியாத சூழலை ராணுவம் எதிர்கொண்டது. தற்போது அங்கு வீடு வீடாக ராணுவத்தினர் மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

காலநிலை மாற்றம் தான் இந்த திடீர் மழை வெள்ளத்துக்கு காரணம் என அந்த நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 20 மாதங்களில் வலேன்சியாவின் ஷிவா நகரில் பதிவான மழையின் அளவை காட்டிலும் அங்கு வெறும் 8 மணி நேரத்தில் மழை அதிகம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை வெள்ளத்தால் ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் விளை நிலங்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை அன்றும் அங்கு மழை தொடர்ந்தது. சுமார் 1.5 லட்சம் மக்கள் அங்கு மின்சார வசதி இல்லாமல் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

The post ஸ்பெயினில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Spain ,Valencia ,Andalusia ,
× RELATED இன்டர்கான்டினென்டல் கால்பந்து...