செய்யூர் வட்டாரத்தில் ஜமாபந்தி முகாம் தொடக்கம்: எம்எல்ஏ பங்கேற்பு

செய்யூர்: செய்யூர் வட்டாரத்தில் ஜமாபந்தி முகாமை பனையூர் பாபு நேற்று தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் பொதுமக்கள் குறைகளை தீர்பதற்கான ஜமாபந்தி முகாம், தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கியது. இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டாரத்தில் ஜமாபந்தி முகாம் வட்டார வளர்ச்சி அலுவலக கூடத்தில் நேற்று தொடங்கியது. மாவட்ட வழங்கல் அலுவலரும் செங்கல்பட்டு வருவாய் தீர்வாய அலுவலருமான பேபி இந்திரா தலைமை தாங்கினார். செய்யூர் வட்டாட்சியர் பெருமாள் முன்னிலை வகித்தார்.

முன்னதாக சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் வேல் முருகன் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினராக செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு கலந்துக்கொண்டு ஜமாபந்தி முகாமின் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, நில அளவீடு, முதியோர் உதவி தொகை உள்ளிட்டவை சம்மந்தமான பல்வேறு மனுக்களை பெற்றார். மனுவினை பரிசீலனை செய்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இம்முகாம் தொடங்கிய முதல் நாளான நேற்று சித்தாமூர் குறு வட்டத்தில் உள்ள கிராமமக்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அடுத்த மாதம் 14ம்தேதி வரையில் நடைபெறும் இந்த முகாமில், பொதுமக்களின் தேவைகள் குறித்து மனு அளித்து பயன்பெறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் ஏழுமலை, சுபலட்சுமி பாபு, துணை பெருந்தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், சிற்றரசு, சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் நிர்மல்குமார், பருக்கள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதி சிவக்குமார், செய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் லோகாம்பிகை ராஜமாணிக்கம், பொலம்பக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் சிவக்குமார், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post செய்யூர் வட்டாரத்தில் ஜமாபந்தி முகாம் தொடக்கம்: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: