இந்த மலைப்பகுதியில் சுமார் 7,140 பேர் வசிக்கின்றனர். பீஞ்சமந்தை மலை கிராமத்தில் தினை, சாமை, கேழ்வரகு, பலா, புளி மற்றும் தற்போதைய சூழலில் தோட்ட கலைத்துறை சார்பாக முட்டைக்கோஸ், மிளகு உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டு வருகிறது. இங்குள்ள மாசற்ற சுற்றுச்சூழல் அனைவரின் மனதையும் ஆட்கொள்ளும் வகையில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். பிரசவத்திற்கு உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல சாலை வசதி இல்லாமல் பலியான கர்ப்பிணிகள், பாம்புக்கடிகளுக்கும், நோய் பாதிப்புகளுக்கும் பறிபோன உயிர்கள் அதிகம்.
சாலை வசதி கிடைக்குமா? என்ற கனவுகளை சுமந்து நின்ற மலைவாழ் மக்களின் துயர் துடைக்கும் வகையில், சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளுக்கு பின்னர் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் தீவிர முயற்சியால் தற்போது திமுக ஆட்சியில் அவர்களது கனவு நிறைவேறியுள்ளது. இதற்காக அணைக்கட்டு அடுத்த முத்துக்குமரன் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 6.55 கி.மீ தூரத்திற்கு ரூ.5.11 கோடி செலவில் தார் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்ப்பிணிகள், நோயாளிகளை டோலிகட்டி தூக்கி சென்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டு கனவுகள் நிறைவேறியதால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மனம் மகிழ்ந்து அரசுக்கு நன்றி கூறி வருகின்றனர்.
The post கடல் மட்டத்திலிருந்து 2,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது சுதந்திரம் பெற்று 76 ஆண்டுக்கு பின் மலை கிராமத்துக்கு சாலை வசதி: டோலிகட்டி தூக்கிச்சென்ற நிலைக்கு முற்றுப்புள்ளி appeared first on Dinakaran.
