வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல உதவி செய்ய ரூ.5 கோடி பேரம் பேசி ஐஎப்எஸ் நிறுவன 4 இயக்குநர்களிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட்

  • பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி அதிரடி
  • ஆதாரங்களுடன் சிக்கியது குறித்து பரபரப்பு தகவல்கள்

சென்னை: ‘ஐஎப்எஸ்’ நிதி நிறுவன இயக்குநர்கள் 4 பேர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் ரூ.5 கோடி பேரம் பேசி, ரூ.32 லட்சம் லஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் டிஎஸ்பி கபிலனை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக் சஸ்பெண்ட் செய்துள்ளார். வேலூரில் ‘ஐஎப்எஸ்’ என்ற பெயரில் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் லிமிடெட் நிதி நிறுவனம் இருந்தது. இதன் பங்குதாரர்கள் மற்றும் சகோதரர்கள் லட்சுமி நாராயணன், தேவ நாராயணன், மோகன் பாபு, ஜனார்த்தனன் என 4 பேர். இவர்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மாநிலம் முழுவதும் ‘ஐஎப்எஸ்’ நிதி நிறுவன கிளைகளை தொடங்கினர். கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து மாநிலம் முழுவதும் 84 ஆயிரம் பேரிடம், ரூ.5,900 கோடி ஐஎப்எஸ் நிறுவனத்தில் முதலீடு பெற்றனர்.

ஆரம்பத்தில், சரியாக வட்டி கொடுத்து வந்த நிலையில், திடீரென நிதி நிறுவன பங்குதாரர்கள் 4 பேரும் பொதுமக்களிடம் பெற்ற ரூ.5,900 கோடியுடன் தலைமறைவாகிவிட்டனர். இதனால், முதலீட்டாளர்கள் ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மீது காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். பெரிய அளவில் நடந்த பொருளாதார மோசடி என்பதால் வழக்கு, மாநில பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார். அதைதொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக் உத்தரவின் படி ஐஜி, டிஎஸ்பி கபிலன் தலைமையிலான குழு ஐஎப்எஸ் மோசடி குறித்து விசாரணை நடத்தினர். அதில், ‘ஐஎப்எஸ்’ நிதி நிறுவனம் மற்றும் அதன் 5 துணை நிறுவனங்கள், இயக்குநர்களான லட்சுமி நாராயணன், வேத நாராயணன், மோகன் பாபு, ஜனார்த்தனன் உட்பட 10 இயக்குநர்கள், 3 முக்கிய ஏஜென்டுகள் என மொத்தம் 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

அதில் முக்கிய ஏஜெண்டுகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், நிதி நிறுவனத்தின் 5 பங்குதாரர்கள் தப்பி சென்று விட்டனர். அவர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து இந்நிறுவனத்தின் இயக்குனர், ஏஜென்ட் வீடுகள் என 31 இடங்களில் சோதனை நடந்தது. இதில், ரூ.1.12 கோடி ரொக்கம், ரூ.34 லட்சம் தங்கம், 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த நிறுவனத்தின் 791 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.121.54 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. ரூ.12.23 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஐஎப்எஸ் நிதி நிறுவன விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி கபிலன் நியமிக்கப்பட்டிருந்தார். அதேநேரம் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்த்த போது, முக்கிய இயக்குநர்களாக உள்ள லட்சுமி நாராயணன், வேத நாராயணன், மோகன் பாபு, ஜனார்த்தனன் ஆகியோர் வங்கி கணக்குகளில் இருந்து பல லட்சம் ரூபாய் பணம் டிஎஸ்பி கபிலன் மற்றும் அவரது உறவினர்கள் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக்கிற்கு, அதிகாரிகள் தகவல் அளித்தனர். அதைதொடர்ந்து குற்றவாளிகளிடம் லஞ்சம் வாங்கியது குறித்து ஐஜி ஆசியம்மாள் தலைமையிலான விசாரணை குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவினர், டிஎஸ்பி கபிலன் மீதான லஞ்ச புகார்கள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, ‘ஐஎப்எஸ்’ நிதி நிறுவன உரிமையாளர்கள் ஆகியோர் வெளிநாடு தப்பி செல்லவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் டிஎஸ்பி கபிலன் ரூ.5 கோடி வரை பேரம் பேசியதாகவும், அதன்படி முதற்கட்டமாக ரூ.32 லட்சம் பணத்தை டிஎஸ்பி கபிலனுக்கு கொடுக்கப்பட்டதும் ஆவணங்கள் மூலம் உறுதியானது. அதோடு இல்லாமல், தற்போது துபாயில் பதுங்கி உள்ள ஐஎப்எஸ் இயக்குநர்களில் ஒருவரான மோகன் பாபு சர்வசாதாரணமாக வெளியே நடமாடி வருகிறார். அவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்து செல்லும் வீடியோவும் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனால்தான், டிஎஸ்பி கபிலன் வெளிநாட்டில் உள்ள இயக்குநர்கள் உட்பட 10 பேரை கைது செய்யாமல் காலம் கடத்தி வந்ததுள்ளார்.

மேலும், துபாயில் உள்ள மோகன் பாபு என்பவரிடம் டெலிகிராம் மூலம் வழக்கு தொடர்பாக சில ரகசியங்களை பகிர்ந்துள்ளார். அதைதொடர்ந்து டிஎஸ்பி கபிலன் வசித்து வரும் நீலாங்கரையில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், நிதி நிறுவன உரிமையாளர்களிடம் ரூ.32 லட்சம் பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளது. மேலும், கரன்சி கட்டுகள், புதிய தங்க நகைகளுக்கான ரசீதுகள் சிக்கியது. கடந்த 2 ஆண்டில் கபிலன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்தபோது, வருமானத்துக்கு அதிகமாக பல லட்சம் ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது உறுதியானது.

பின்னர் டிஎஸ்பி கபிலனிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவரது வீட்டில் கைப்பற்றட்ட ஆவணங்களின் அறிக்கை நேற்று முன்தினம் ஐஜி ஆசியம்மாள், கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக்கிடம் வழங்கினார். உயரதிகாரிகளின் அறிக்கையில், டிஎஸ்பி கபிலன் ஐஎப்எஸ் நிதி நிறுவன உரிமையாளர்களை கைது செய்யாமல் இருக்க ரூ.5 கோடி பேரம் பேசி, முதலில் ரூ.32 லட்சம் பணம் பெற்றது உறுதியானது. அதைதொடர்ந்து டிஎஸ்பி கபிலன் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், லஞ்சம் குறித்து விசாரணை நடத்த துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

  • கபிலன் வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பரிந்துரை

    ‘ஐஎப்எஸ்’ நிதி நிறுவனத்தின் முக்கிய ஏஜென்ட்டுகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், காவலில் எடுக்கப்பட்ட ஏஜென்ட் ஒருவர் தனது வாக்குமூலத்தில் ‘‘உரிமையாளர்கள் வெளிநாடு தப்பிக்கவும், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 கோடி பணத்தை விசாரணை அதிகாரியான டிஎஸ்பி கபிலன் கேட்டுள்ளார். அதற்கு முன் பணமாக ரூ.32 லட்சத்தை நான், டிஎஸ்பி கபிலனிடம் வழங்கினேன். ஆனால் பணம் கொடுத்த என்னையும் கைது செய்தனர் என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், டிஎஸ்பி கபிலன் இந்த வழக்கில் வசமாக சிக்கியுள்ளார். இதையடுத்து டிஎஸ்பி கபிலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் விசாரணைக்காக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை பொருளாதார குற்றப்பிரிவின் கூடுதல் டிஎஸ்பி ஜஸ்டின் ராஜ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

The post வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல உதவி செய்ய ரூ.5 கோடி பேரம் பேசி ஐஎப்எஸ் நிறுவன 4 இயக்குநர்களிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: