மார்க்கத்தில் கட்டாயம் இல்லை!

இஸ்லாமிய வாழ்வியல்

மனிதர்களைப் படைத்த இறைவன் தனது தூதர்கள் வாயிலாகத் தனது வழிகாட்டுதலை அருளினான். அதனை ஏற்கவும் ஏற்காதிருக்கவும் மனிதனுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. இம்மை ஒரு தேர்வுக் களம் என்று குர்ஆன் குறிப்பிடுகிறது. தேர்வின் போது முழுச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். சுதந்திரம் வழங்கப்பட்ட மனிதனையே அவனுடைய செயல்களுக்குப் பொறுப்பாக்க முடியும். கட்டாயப்படுத்தப்பட்ட மனிதனை நோக்கி ஏன் இப்படிச் செய்தாய் என்று கேள்வி கேட்க முடியாது.

கட்டாயப்படுத்துவது இறைநீதிக்குப் புறம்பானது. எனவே விவேகம், அழகிய விவாதங்கள், அழகிய வார்த்தைகளைக் கொண்டு இஸ்லாத்தின்பால் மக்களை அழைக்கும்படியாக குர்ஆன் கட்டளையிடுகிறது. இஸ்லாத்தைத் திணிக்கவோ கட்டாயப்படுத்தவோ வேண்டாம் என்று எச்சரிக்கிறது. இறைவன் நாடியிருந்தால் உலகிலுள்ள அனைவரும் முஸ்லிம்களாக ஆகியிருப்பார்கள். இறைவன் அப்படி நாடவில்லை. ஆதலினால் மக்களைக் கட்டாயப்படுத்துவது தவறு என்று குர்ஆன் கூறுகிறது.

“தீனில் (இறைநெறியை மேற்கொள்வதில்) யாதொரு கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லை.” (குர்ஆன் 2:256)

“குர்ஆன் உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்.”
(குர்ஆன் 18:29)

“உலகிலுள்ள அனைவரும் நம்பிக்கை கொண்டு கீழ்ப்படிந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பது உம் இறைவனின் நாட்டமாக இருந்தால், இப்பூமியிலுள்ள அனைவருமே இறைநம்பிக்கை கொண்டிருப்பார்கள். அப்படியிருக்க மக்கள் நம்பிக்கையாளர்களாகிவிட வேண்டுமென்று நீர் அவர்களை
நிர்பந்திப்பீரா?” (குர்ஆன் 10:99)

“(நபியே!) இறைத்தூதை எடுத்துரைப்பது மட்டுமே உமது பணியாகும். கணக்கு வாங்குவது நமது பணியாகும்.” (குர்ஆன் 13:40)

நபிகள் நாயகத்தின் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில் ஒருமுறையேனும் எவரையாவது கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாக வரலாறு கிடையாது. சந்தித்த மனிதர்களிடம் அவர் இஸ்லாத்தைக் கூறுவார். பின்னர் அவர்களின் முடிவுக்கு விட்டு விடுவார்.

கைதிகளாகப் பிடிபட்டவர்கள், அடிமைகள், பணியாளர்கள், ஏழைகள் ஆகிய பலவீனமான மக்களிடமும் அவர் இஸ்லாத்தைத் திணித்ததில்லை. நபிகளாரை வளர்த்துப் பாதுகாப்பு அளித்த அவருடைய பெரிய தந்தை அபூதாலிப் இறுதிவரை இஸ்லாத்தை ஏற்காமலேயே மரணித்தார். கட்டாயம், திணிப்பு எனும் பேச்சுக்கே இஸ்லாமிய வாழ்வியலில் இடமில்லை.

– சிராஜுல்ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

“இறைநெறியை மேற்கொள்வதில் யாதொரு கட்டாயமும் இல்லை. தவறான வழியிலிருந்து நேரான வழி தெளிவாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. இனி எவர் அசத்தியத்தை நிராகரித்து, இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் திடமாக பலமான பிடிமானத்தைப் பற்றிக்கொண்டவர் ஆவார். அது என்றுமே அறுந்துவிடாது.” (குர்ஆன் 2:256)

The post மார்க்கத்தில் கட்டாயம் இல்லை! appeared first on Dinakaran.

Related Stories: