கல்வியைவிட உயர்வானது எது?

உலகிலேயே அழியாத செல்வம் கல்விச் செல்வம் மட்டுமே. மேலும், அதிகரிக்கும் செல்வமும் அதுதான். பணத்தைப் பகிர்ந்து கொடுத்தால் அது தீர்ந்துவிடும். ஆனால், கற்ற கல்வியை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும்போது இன்னும் அதிகரிக்கும். அதனால்தான் எந்த விழாவுக்கும் இல்லாத சிறப்பு கலைமகள் விழாவுக்கு உண்டு. மற்ற விழாக்களையெல்லாம் ‘பூஜை’ என்ற புகழ்ச்சொல்லுடன் சேர்த்துச் சொல்வதில்லை. ‘தீபாவளி பூஜை’ என்றோ ‘பொங்கல் பூஜை’ என்றோ சொல்வதில்லை. கலைமகள் விழாவை மட்டும் ‘சரஸ்வதி பூஜை’ என்று சிறப்பித்துச் சொல்கிறோம்.இத்தகைய கல்விச்செல்வம் இந்தப் பிறவியில் மட்டுமே இன்பம் தராது. மாறாக, எழுகின்ற பிறவிகள்தோறும் தொடர்ந்து வந்து துணைசெய்யும் என்பதை,
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து”
என்கிறார் திருவள்ளுவர்.

மூன்று வயதுக்குழந்தை ‘ஆத்திசூடி’ முழுமையாக அப்படியே ஒப்பிக்கிறது. 6 வயதுக் குழந்தை ஆயிரத்து முந்நூற்று முப்பது குறளையும் அச்சு அசலாகச் சொல்கிறது. இவ்வகைக் கல்வி போன பிறவிகளில் கற்றதன் தொடர்ச்சி.ஆகவே, உலகில் அழியாத செல்வமாகிய இக்கல்வி நமக்கு ஆணவத்தை உண்டாக்கும். கூடவே செல்வமும் இளமையும் ஆணவத்தைத் தருபவைதான். ஆனால், செல்வத்தால் வருகின்ற ஆணவம், தன்னிடமுள்ள செல்வமும் செலவாகி வறுமை வந்தால் வற்றிப்போய்விடும். இளமையாக இருக்கும்போது ‘தான் அழகு’ என்ற ஆணவம், முதுமையின் முன்னுரையாகிய நரைமுடி ஒன்று வந்தால் அழகால் வருகின்ற ஆணவம் அழிந்துவிடும். ஆனால், கல்வியால் வருகின்ற ஆணவம் போகவே போகாது. காரணம், கல்வி நம்மைவிட்டுப் போகாது. அப்படியானால் கல்வியால் வருகின்ற ஆணவத்தைப் போக்க ஒரே ஒருவழிதான் உண்டு.அந்த வழியைத் திருவள்ளுவர் தன் இரண்டாவது திருக்குறளிலேயே சொல்லிவிட்டார். ‘கற்றதனால் ஆய பயன்’ என்ற குறளில், கல்வியால் ஏற்படும் பயன் என்ன? என்று கேள்வி கேட்டு, இறைவனின் பாதத்தைப் பணிவதுதான் என்று பதில் சொல்கிறார். ‘இறைவா! நீ இட்ட பிச்சைதான் இந்தக் கல்வி’ என்ற மனப்பான்மை ஏற்படவேண்டும். சந்தத்தமிழின் தந்தை அருணகிரிநாதர், “யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்தது” என்கிறார்.ஆகவே, கல்வியின் பயன் கடவுளின் பாதத்தைப் பணிவது. அதனால் கற்ற கல்வியைவிட உயர்வானது கற்ற கல்வியைக் கடவுளின் பாதத்தில் அர்ப்பணிப்பதுதான்.

 

The post கல்வியைவிட உயர்வானது எது? appeared first on Dinakaran.

Related Stories: