ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள துர்கை அம்மன் கோயில் நுழைவு பாதைக்கு மாற்று ஏற்பாடு: மெட்ரோ ரயில் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில், நுாற்றாண்டுகள் பழமையான ரத்தின விநாயகர் மற்றும் துர்கை அம்மன் கோயில் உள்ளது. சென்னை மெட்ரோ திட்டத்தின் 2ம் கட்ட பணிகளுக்காக, இந்த கோயிலின் ராஜ கோபுரத்தை இடிக்கும் வகையிலான திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலயம் காப்போம் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.ரமணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு அடங்கிய, முதல் பெஞ்ச் நீதிபதி குமரேஷ் பாபு, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி, மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆகியோர் கோயிலை பார்வையிட வேண்டும்.

கோயிலை இடிப்பதா அல்லது மாற்றுவதா என்பது தொடர்பான மாற்று வழியை ஆராய வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி கடந்த 3ம் தேதி கோயிலை நீதிபதி குமரேஷ் பாபு உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மாற்று திட்டம் குறித்த விவரங்களை தாக்கல் செய்தார். அதில் துர்கை அம்மன் கோயில் நுழைவு கோபுரத்தை 5 மீட்டர் கோயில் உள்புறம் தள்ளி வைத்து, மெட்ரோ பணிகள் முடிந்ததும் மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படும்.

மெட்ரோ பணிகள் நடக்கும் காலங்களில், பக்தர்கள் கோயிலுக்கு சென்று வர வசதியாக, 4 மீட்டர் சுற்றளவுக்கு மாற்று பாதை அமைத்து தரப்படும். ரத்தன விநாயகர் கோயில், தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, பணி முடிந்ததும் அறநிலையத்துறையால் கண்டறியப்பட்ட இடத்தில் மெட்ரோ நிர்வாகம் கோயிலை கட்டி தரும். மெட்ரோ ரயில் நிலைய நுழைவு, வெளியேறும் பாதை, முதலில் ரத்தின விநாயகர் கோயில் வளாகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது.

தற்போது, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன வளாகத்தில் மாற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி ஆஜராகி மெட்ரோ ரயில் நிர்வாகம் கையகப்படுத்தி இருக்கும் கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ள இடத்தை, பக்தர்களின் வாகன பார்க்கிங் பகுதியாக மாற்றித் தர வேண்டும் என்றார். மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்த மாற்று திட்டத்தை ஏற்ற முதல் பெஞ்ச், வாகன பார்க்கிங் விவகாரம் தொடர்பாக மனுதாரர் தரப்பு சம்பந்தப்பட்ட துறையிடம் கோரிக்கை மனு அளித்து நிவாரணம் பெறலாம் என அறிவுறுத்தி, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள துர்கை அம்மன் கோயில் நுழைவு பாதைக்கு மாற்று ஏற்பாடு: மெட்ரோ ரயில் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: