×

புதுச்சேரி மதுபானங்கள் விற்பனையை தடுக்க டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

செய்யூர்: சூனாம்பேடு பகுதியில் கள்ளச்சந்தையில் விற்கப்படும் புதுச்சேரி மதுபானங்களை தடுக்க, டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில் 13 கிராமங்களை உள்ளடக்கிய பெரிய ஊராட்சியாக சூனாம்பேடு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில், குற்றச்செயல்கள் அதிகம் நடப்பதால் பல ஆண்டு காலமாக, டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இதனால், இங்குள்ளவர்கள் சூனாம்பேட்டில் இருந்து குறைந்த கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுச்சேரிக்கு சென்று மதுபானங்கள் அருந்தி வந்தனர். நாளடைவில் இங்குள்ள சிலர் புதுச்சேரி மதுபானங்களை சூனாம்பேடு பகுதிக்கு கடத்தி வந்து, அதனை கள்ளத்தனமாக விற்று வந்தனர்.

ஒரு கட்டத்தில், புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வந்து ஒவ்வொரு வீடுகளிலும் விற்க துவங்கினர்.
சூனாம்பேடு போலீசாரும், அவ்வப்போது மதுபானங்கள் விற்பவர்களை கைது செய்து, மதுபானங்களை பறிமுதல் செய்து வந்தாலும், இப்பகுதியில் நடக்கும் மதுபான விற்பனையை தடுக்க முடியாமல் போலீசார் போராடி வருகின்றனர். எனவே, வெளிமாநில மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் சூனாம்பேடு பகுதியில் தமிழக அரசு டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சூனாம்பேடு ஊராட்சி முன்பு கொலை, கொள்ளை என பிரச்னைக்குறிய பகுதியாக இருந்தது. நாளடைவில் அது குறைந்தது. தற்போது, காவல் துறை ஆய்வாளராக உள்ள அமிர்தலிங்கமும் பல பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தி குற்றச் சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். இருப்பினும், வெளிமாநில மதுபானங்கள் கடத்தி இப்பகுதியில் விற்பனை செய்வதை முற்றிலும் தடுக்க சூனாம்பேடு பகுதியில் தமிழக அரசு டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post புதுச்சேரி மதுபானங்கள் விற்பனையை தடுக்க டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Tasmac ,Seyyur ,Soonambedu ,Chengalpattu district ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் முழு அடைப்பு...