×

எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: கலெக்டர் சினேகா தகவல்

செங்கல்பட்டு, டிச.17: செங்கல்பட்டு மாவட்டதில் எஸ்.ஐ.ஆர் மூலம் 7 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) கடந்த மாதம் தொடங்கியது. இதனையடுத்து இதற்கான பணிகளில் அரசு அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். இம்மாதம் 14ம் தேதி வரை இதற்கான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 14ம் தேதியோடு எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எஸ்ஐஆர் பணியால் தமிழகத்தில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் இந்த எஸ்ஐஆர் பணியால் 7 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லூர் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கடந்த 2 மாதங்களாக வாக்காளர் சரிபார்க்கும் சீரமைப்பு பணி எஸ்ஐஆர் மூலம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தகுதியான வாக்காளர்கள் புலம் பெயர்ந்தவர்கள், இறப்பு, இடம் மாற்றம் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வாக்காளர் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இரண்டு மாதங்கள் நடைபெற்ற இந்த பணி முழுவதுமாக முடிக்கப்பட்டு தற்போது தொகுதி வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டதில் மொத்தம் 27,87,362 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்தனர். இதில் எஸ்ஐஆர் பணி மூலம் 7,01,901 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர்களாக 20 லட்சத்து 85 ஆயிரத்து 461 பேர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Chengalpattu district ,SIR ,Sneha ,Chengalpattu ,Collector ,Special Intensive Revision ,Tamil Nadu ,
× RELATED செங்கல்பட்டு – திருப்போரூர் இடையே...