×

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு தங்க கவசத்தில் அருள்பாலித்த வல்லக்கோட்டை முருகன்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பெரும்புதூர், டிச.17: பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, தங்க கவசத்தில் அருள்பாலித்த முருகனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வல்லக்கோட்டை முருகன் கோயில் அருணகிரிநாதரால், 8 திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். தமிழ் மாதங்களில் சிறந்ததாய் போற்றப்படும் மார்கழி செவ்வாயன்று பிறந்தது. இக்கோயிலில், ஆண்டுதோறும் மார்கழி முதல் நாள் மூலவருக்கு தங்கமுலாம் கவசம் அணிவிக்கப்படுவது வழக்கமாகும்.

அந்த வகையில், செவ்வாயன்று மார்கழி பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, கோ பூஜை செய்யப்பட்டது. பிறகு மூலவருக்கு பலவித திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தங்கமுலாம், கவசம் சாற்றப்பட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு மயில் மண்டபத்தில் மார்கழி மாத சிறப்பு யாகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சாமந்தி மாலை, வெற்றிலை மாலை அணிந்து ரத்தினாங்கி சேவையில் காட்சியளித்தார்.
பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மண்டல இணை ஆணையர் குமரதுரை அறிவுரைப்படி, கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் செய்திருந்தனர்.

Tags : Vallakottai Murugan ,Margazhi ,Murugan ,Subramania Swamy Temple ,Vallakottai ,Perumbudur ,Hindu Religious and Endowments Department… ,
× RELATED செங்கல்பட்டு – திருப்போரூர் இடையே...