×

திருப்போரூர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் தொடரும் விபத்து: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்போரூர்: ஓ.எம்.ஆர். சாலை, ஓ.எம்.ஆர். புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் எப்போதும் கனரக வாகனங்களும், கார், வேன்களும் சென்று கொண்டே இருக்கின்றன. இதுமட்டுமின்றி அரசு பேருந்துகளும், கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களும் பயணிக்கின்றன. இதனால் இந்த சாலைகள் எப்போதும் வாகனப் போக்குவரத்து நிறைந்தே காணப்படுகிறது.

நீண்ட தூரங்களில் இருந்து வரும் வாகனங்களும், உள்ளூரில் சரக்கு போக்குவரத்துக்கு இயக்கப்படும் வாகனங்களும் ஓ.எம்.ஆர். சாலை, புறவழிச்சாலை, செங்கல்பட்டு சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஓரங்களில் இரவில் நிறுத்திவைக்கப்படுகின்றன. இவற்றில் இரவு நேரங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் முறையாக அமைக்கப்படாததால் இவை நிறுத்தப்பட்டுள்ளதே பல ஓட்டுனர்களுக்கு தெரிவதில்லை. இதன் காரணமாக வேகமாக வரும் வாகனங்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.

இது மட்டுமின்றி பழுதான வாகனங்கள், சவாரி கிடைக்காத வாகனங்கள் போன்றவையும் இவ்வாறு நீண்ட காலமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த இடம் குப்பை கொட்டும் இடமாக மாற்றப்பட்டு அவற்றை சுற்றி புதர் செடிகளும் வளர்ந்து விடுகின்றன. எனவே காவல்துறையினர் கேட்பார் இன்றி நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவோ அல்லது பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

Tags : Thiruporur ,OMR Road ,OMR Bypass Road ,East Coast Road ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...