புதன்கிழமை தோறும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறார் சென்னை கமிஷனர் அருண்

சென்னை: புதன்கிழமைதோறும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களிடமிருந்து குறை தீர் மனுக்களை சென்னை காவல் ஆணையர் அருண் நேரில் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் காவல் உயர் அதிகாரிகள் குறை தீர் முகாம்களை நடத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஏற்கனவே ஆணையிட்டுள்ளார்.

அதன்படி சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களின் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் இதர காவல் உயரதிகாரிகள் அலுவலகங்களில் பெறப்படும் அனைத்து புகார்களையும் பரிசீலித்து உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள, சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் பிரிவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையாளர் அருண், ஒவ்வொரு வாரமும், புதன்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து குறை தீர் மனுக்களை நேரில் பெறவுள்ளார்.

இதர வார நாட்களான, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை காவல் கூடுதல் ஆணையாளர் அளவிலான உயரதிகாரிகளும், வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் துணை ஆணையாளர் அளவிலான காவல் அதிகாரிகளும் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைதீர் மனுக்களை பெறுவார்கள். எனவே, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செயல்படும் பொதுமக்கள் குறை தீர்க்கும் பிரிவில் காவல் உயரதிகாரிகளிடம் புகார் மனுக்களை சமர்ப்பிக்கலாம் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

The post புதன்கிழமை தோறும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறார் சென்னை கமிஷனர் அருண் appeared first on Dinakaran.

Related Stories: